புதுடெல்லி: மக்களவை அத்துமீறல் வழக்கில் விசாரணைக்காக மேலும் இருவரை டெல்லி போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர். கைதானவர்களில் ஒருவர் கர்நாடகாவின் பாகல்கோடு முன்னாள் காவல் கண்காணிப்பாளரின் மகன் சாய் கிருஷ்ணா என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “கர்நாடகாவைச் சேர்ந்த பொறியியலாளரான சாய் கிருஷ்ணா டிச.13ம் தேதி மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து வண்ணப்புகை குப்பி வீசிய மனோரஞ்சனின் நண்பர். அவர்கள் இருவரும் பெங்களூரு பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். வீட்டில் இருந்தபடி வேலை செய்து வரும் சாய் கிருஷ்ணாவை புதன்கிழமை இரவு 10 மணிக்கு பாலக்கோடு வீட்டில் வைத்து டெல்லி போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்காக அவர் டெல்லி கொண்டு செல்லப்படுகிறார்” என்றனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்ட மற்றொருவர், உத்தரப் பிரதேச மாநிலம் ஜலாவுன் பகுதியைச் சேர்ந்த அதுல் குல்ஸ்ரேஸ்தா. முதல்கட்ட விசாரணையில் ‘பச்சா’ என்று அறியப்படும் அதுல் மீது எந்த குற்ற வழக்குகளோ அரசியல் தொடர்புகளோ இல்லை. என்றாலும் தனது மாணவர் பருவம் முதல் பகத் சிங்-ன் சித்தாந்தத்தின் மீது ஈடுபாடு கொண்டவர் என்று தெரியவந்துள்ளது. இவர் மக்களவை அத்துமீறல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் பகத் சிங் உறுப்பிர்கள் மன்ற முகநூலில் பக்கத்தில் உரையாடியதன் காரணமாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வந்த அதுல் விவசாயிகள் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். கைது குறித்து விசாரிப்பதற்காக அதுல் வீட்டுக்கு செய்தியாளர்கள் சென்றபோது அவரது குடும்பத்தினர் கருத்து சொல்ல மறுத்துவிட்டனர்.
கடந்த டிச.13ம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து கீழே குதித்து புகையை கக்கும் குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட உத்தரப் பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த சாகர் சர்மா, பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்ட ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகியோரும் அன்றைய தினமே டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு சட்டமான உபாவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்துக்கு திட்டமிட்டதாகவும் மூளையாக செயல்பட்டதாகவும் கூறப்படும் லலித் மோகன் ஜா அவருக்கு உதவிய மகேஷ் குமாவத் என்பவரையும் டெல்லி போலீஸார் பின்னர் கைது செய்தனர். இவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முன்