மேல்மா சிப்காட் போராட்டத்தில் அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்ட நடவடிக்கை: உயர் நீதிமன்றம்

சென்னை: செய்யாறு அருகே மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அருள் ஆறுமுகத்தின் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமைந்துள்ள மேல்மா சிப்காட்டின் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்காக 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அவர்கள் மீது பதிவான 11 வழக்குகளின் அடிப்படையில், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இதில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தில் அடைபக்க மாவட்ட ஆட்சியர் கடந்த நவம்பர் 15-ம் தேதி உத்தரவிட்டார். பின்னர், 6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை திரும்பப்பெற்ற அரசு, அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை. இந்த நிலையில், தனது கணவர் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி பூவிழி கீர்த்தனா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அருள் ஆறுமுகம் எந்தவொரு தீவிர குற்றத்திலும் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முகாந்திரமும் இல்லாத நிலையில், மக்களை தூண்டியதாகவும், நிலம் வழங்க முன்வருபவர்களை தடுத்ததார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில், உள்நோக்கத்தோடு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம். எனவே, மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் தொடர்பான விவரங்கள், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் மற்றும் விசாரணை ஆவணங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.