3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றம்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி,

இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு நேற்று முன்தினம் நிறைவேற்றியது. இவை காலனி ஆதிக்க மனப்பான்மையில் இருந்தும், அதன் அடையாளங்களில் இருந்தும் மக்களை விடுவிக்கும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ஆங்கிலேய காலனித்துவ குற்றவியல் சட்டங்களை அரசு உண்மையிலேயே தூக்கி எறிந்துவிட்டதா? 3 மசோதாக்களிலும் முந்தைய சட்டங்கள் 90 முதல் 95 சதவீதம் வரை நகலெடுக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். அந்த உண்மையை யாராவது மறுக்கவோ அல்லது விவாதிக்கவோ முடியுமா?.

உண்மையில், அசல் இந்திய தண்டன சட்டம் மற்றும் சாட்சியச் சட்டத்தை உருவாக்கிய மெக்காலே மற்றும் பிட்ஸ் ஸ்டீபன் ஆகியோரை அழியாதவர்களாக அரசு மாற்றி இருக்கிறது. காலனி காலத்து சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை வகுக்க கிடைத்த வாய்ப்பை அரசு வீணடித்து இருக்கிறது” என்று அதில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.