
அழுவாச்சி கதையாக வருகிறது: வடிவேலு
காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் வடிவேலு. அவரது காமெடிகள் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. சில வருட இடைவெளிக்கு பிறகு அவர் 'மாமன்னன்' படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. ஆனால் மாமன்னன் படத்திற்கு பிறகு தனக்கு அழவைக்கும் சீரியசான கேரக்டர்கள்தான் வருகிறது என்று அதே சர்வதேச பட விழாவில் வருத்தத்துடன் குறிபிட்டார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: பழைய படங்களைப் பார்த்தால் சவுகார் ஜானகி அழுதுகொண்டேயிருப்பார். 'வீட்ல தொல்ல தாங்காம தானே இங்க வந்தோம். நீ ஏன்மா அழுகுற' என கேட்பார்கள். அழுவதெல்லாம் இப்போது வொர்க்கவுட் ஆகாது. ஆனால், அப்படியிருந்தும் 'மாமன்னன்' கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விருது நீங்கள் எனக்கு கொடுத்தது அழ வைத்ததற்கு. இப்போதெல்லாம் எனக்கு வரும் கதைகள் ஒரே சோகக் கதைகளாகவும், அழுகை கதைகளாக வருகிறது. அவர்களிடம் நான் கொஞ்ச நாட்கள் ஆகட்டும். பிறகு இப்படியான கதைகளில் நடிக்கிறேன் என்று சொன்னேன். என்றார்.