ஆளுநர் vs முதல்வர்… மாநில அமைச்சர்கள் vs மத்திய அமைச்சர்கள் – மீண்டும் முற்றும் மோதல் போக்கு!

மழை, வெள்ள பாதிப்பு:

சென்னை புயல் மழை வெள்ளத்தின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேரமைதி காத்தார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. 90 செ.மீ-க்கும் அதிகமான மழை 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்தத்தால், மழைநீர் பெருக்கெடுத்துக் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்றது. இதனால், தென்மாவட்ட மக்கள் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பகுதியைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

வெள்ள பாதிப்பு

இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்படியே பிரதமர் மோடியைச் சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து பேச்சு வார்த்தையும் நடத்தியிருந்தார். அதே நேரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு மீட்புப்பணிகள் குறித்து மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை ராஜ் பவனில் கூட்டியிருந்தார்.

தனி ஆலோசனைக் கூட்டம்:

இந்தக் கூட்டம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்கக் கேட்டுக்கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் வரவில்லை. மழை பாதிப்பால் குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலியில் நிலைமை மோசமாக இருக்கிறது.

ஆலோசனைக் கூட்டம்

மத்திய அரசுத் துறையின் அமைப்புகள் மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்திருக்கின்றன. மேலும், மாநில அரசால் கோரப்படும்போது அவை பணியில் ஈடுபட்டுவருகின்றன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், ‘போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை அமைப்புகள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று இருப்பதாக’ கவலை தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆளுநரைத் தாக்கி பேசிய முதல்வர்:

ஆளுநர் மாளிகையிலிருந்தது வந்த அறிக்கையில், மாநில அரசிடமிருந்து ‘போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது’ என்ற வார்த்தை இருந்தது. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ஆளுநர் மாளிகை அறிக்கை தொடர்பாக அவரிடம் கேள்வியும் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய முதல்வர், “ஆளுநர் வாரத்துக்கு ஒருமுறை டெல்லிக்குச் சென்று வருகிறார். அப்படிப் போகும்போது தயவுசெய்து டெல்லியில் வாதாடி, போராடி தேவையான நிதியை வாங்கிக் கொடுத்தால் அவர்களுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருப்போம்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின்

NDRF-ல் இருந்து இதுவரை நமக்குக் கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. மாநிலத்தின் சவாலான நிதிநிலை சூழலிலும் மத்திய அரசு கூடுதலாக எந்த நிதியைத் தராத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசின் நிதியைச் செலவு செய்து நிவாரணப் பணிகளைச் செய்துவருகிறோம். சென்னை மீட்புப் பணிகளுக்கு 1,500 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவிடப்பட்டிருக்கிறது. இங்கு 500 கோடி ரூபாய்க்கும் மேலாகச் செலவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என்று பேசியிருந்தார்.

உதயநிதி VS நிர்மலா சீதாராமன்:

அமைச்சர் உதயநிதி, மக்களின் பணத்தைத்தான் தாங்கள் கேட்கிறோம். அவர்கள் அப்பன் வீட்டுப் பணத்தைக் கேட்கவில்லை என்று பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “அவர்கள் பாஷை அப்படித்தான் இருக்கும். அப்பன் வீட்டுச் சொத்தா என்று கேட்பவரை, அப்பன் வீட்டுச் சொத்தை வைத்த பதவியை அனுபவிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா… கேட்க முடியுமா… இதுபோன்ற பேச்சு, அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் வார்த்தைகள் வரவேண்டும். இதனை பொதுவாகச் சொல்கிறேன். அவர்மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை” என்று பேசியிருந்தார்.

நிர்மலா சீதாராமன்

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி, “வெள்ள பாதிப்புக்காகக் கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாகச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தைக் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தைத் தானே கேட்கிறோம்’ என்று கூறினேன். என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள். மீண்டும் சொல்கிறேன் ; மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்திலிருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.” என்று தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்.

மத்திய அரசுக்குச் சிக்கல்:

ஒரு பக்கம் மாநில முதல்வர் ஆளுநரை நேரடியாகத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சரைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “ஆளுநர் மாநில அரசுக்கு எதிராக ஒரு தனி அரசு நடத்துவதுபோல ராஜ் பவனில் கூட்டம் நடத்தினர். அதனை மாநில அரசும் தவிர்த்துவிட்டது. கூட்டத்துக்குப் பிறகு மாநில அரசிடமிருந்து ஒருங்கிணைப்பு இல்லை என்ற அறிக்கை அரசுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் அப்படி ஆளுநர் குறித்து முதல்வர் பேசியிருப்பது.

முதல்வர் ஸ்டாலின் – பிரதமர் மோடி

அதேபோல, இந்த பேரிடர் பாதிப்புகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து பணத்தைக் கொடுத்துவிட்டு மத்திய அரசு தொகுப்பிலிருந்து நிதியை விடுவித்தது போல மத்திய அமைச்சர்கள் தொடங்கி அண்ணாமலை வரை பேசுகிறார்கள். அது வெள்ளம் வந்திருந்தாலும் இல்லை என்றாலும் அரசுக்கு வரவேண்டிய பணம். அந்த சூழலில்தான் அமைச்சர் உதயநிதி பதில் சொல்லியிருக்கிறார். இப்போது மத்திய அரசு மாநில அரசுக்குப் பணம் கொடுத்தாலும் நாங்கள்தான் போராடி வாங்கியிருக்கிறோம் என்று திமுக சொல்லும். பணம் தரவில்லை என்றாலும், மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்று சொல்வார்கள். உண்மையில் இப்போது சிக்கல் மத்திய அரசுக்குத்தான்” என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.