இந்து கோயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: அமெரிக்கா கடும் கண்டனம்

நெவார்க்: கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றின் சுவரில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டது தொடர்பாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் சுவாமிநாராயண் கோயில் உள்ளது. அதில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக ஸ்பிரே பெயிண்ட் மூலம் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை எக்ஸ் சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், “கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீசுவாமிநாராயண் இந்து கோவில் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு காரணமானவர்களை கண்டறியும் நோக்கில் நெவார்க் காவல் துறையின் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

— State_SCA (@State_SCA) December 23, 2023

சர்ச்சையின் பின்னணி: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி அமெரிக்கா, கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டு: காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.