சிதம்பரம்: கணவனைக் கொன்றுவிட்டு ஜாமீனில் காதலனுடன் எஸ்கேப் – 10 ஆண்டுகள் கழித்து கைதும் பின்னணியும்!

சிதம்பரம், கனகசபை நகரை சேர்ந்தவர்கள் சம்பத் – கிரண் ரூபினி தம்பதியினர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய சம்பத், அண்ணாமலை நகரில் இன்டர்நெட் சென்டரும் நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி நள்ளிரவு, மனைவி கிரண் ரூபினிக்கு சோடா வாங்குவதற்காக தனது பைக்கில் வெளியே சென்றார் சம்பத். இந்நிலையில் சம்பத் விபத்தில் சிக்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிரண் தேடி செல்ல,  வீட்டிலிருந்து 300 அடி தூரத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு தலை சிதைந்து சடலமாக கிடந்த சம்பத்தைப் பார்த்து கதறியழுதார். அவரது அலறலைக் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்து விட்டதாக போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜேஷ், கிரண் ரூபினி

அதையடுத்து அங்கு வந்து உடலை மீட்ட போலீஸார், வழக்குப் பதிவு செய்ததுடன், அந்த விபத்து குறித்தும், அடையாளம் தெரியாத அந்த வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேசமயம், `காரின் டயர்கள் ஏறித்தான் சம்பத்தின் தலை நசுங்கியிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு கனமான உலோகத்தால் தலையில் பலமாக தாக்கப்பட்டிருக்கிறார்’ என்று பிரேத பரிசோதனை அறிக்கை வர, உஷாரானது போலீஸ். சம்பத்துக்கு யாராவது எதிரிகள்  இருக்கிறார்களா என்று கிரண் ரூபினியிடம் விசாரணை நடத்திய அப்போதைய டி.எஸ்.பி ராஜாராம், முக்கிய குற்றவாளியே அவர்தான் என்பதை கண்டுபிடித்தார். கொலையின் பின்னணி குறித்து அப்போது பேசிய விசாரணை அதிகாரிகள், “சம்பத் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் நேரத்தில், கிரண் ரூபினிதான் அந்த இன்டர்நெட் சென்டரை பார்த்து வந்தார்.

அப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்குகளை துவங்கிய கிரண் ரூபினி, முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் `சாட்’ செய்து வந்திருக்கிறார். அத்துடன் தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செல்வதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்போதுதான் முட்லூரைச் சேர்ந்த அமீர் பாஷாவும், அவர் மூலம் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷும் அறிமுகமாகியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ராஜேஷும், கிரண் ரூபினியும் நெருங்கிப் பழகியிருக்கின்றனர். நாளடைவில் அந்த பழக்கம், திருமண உறவை தாண்டிய நட்பாக மாறியது. சம்பத் பணிக்கு சென்ற பிறகு, ராஜேஷை தன் வீட்டிக்கு அழைத்தும், லாட்ஜுகளில் அறை எடுத்தும் தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் கிரண் ரூபினி.

கொலை செய்யப்பட்ட சம்பத்

அதையடுத்து ராஜேஷ் சிதம்பரத்திலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்துவிட, இருவரும் தினமும் அங்கு சந்தித்திருக்கின்றனர். இவர்களின் நட்பு தெரிய வந்ததால், மனைவியை கண்டித்திருக்கிறார் சம்பத். இந்த விவகாரத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு வருடம் கருத்து வேறுபாடு நிலவி வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் சம்பத் கண்டிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத  கிரண் ரூபினி, `அவர் உயிருடன் இருந்தால் நாம் வாழ முடியாது. நம்மை வாழ விடாமல் பிரித்து விடுவார். அதனால் அவரை முடித்துவிட வேண்டும்’ என்று ராஜேஷிடம் கூறியிருக்கிறார். சம்பத்தை கொலை செய்துவிட திட்டம் தீட்டிய இருவரும், அதற்காக அமீர் பாஷாவை அணுகியிருக்கின்றனர். அவரும் ஒப்புக்கொள்ள, சம்பத்தை கார் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்தாக மாற்றிவிடலாம் என்று திட்டமிட்டிருக்கின்றனர்.

அதன்படி 2013 ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று  மாலை 5 மணியில் இருந்தே, ராஜேஷும், அமீர் பாஷாவும் காரில் காத்திருந்திருக்கின்றனர். அன்றைய தினம் நடராஜர் கோயிலுக்கு அர்த்தஜாமை பூஜைக்கு சென்று விட்டு, இரவு 11.20 மணிக்கு வீடு திரும்பினார் சம்பத். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், அதனால் சோடா வாங்கி வருமாறும் கூறி, சம்பத்தை கடைக்கு அனுப்பிய கிரண் ரூபினி, அதை ராஜேஷுக்கு போன் மூலம் தெரிவித்திருக்கிறார். அப்போது சோடா வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த சம்பத்தின் தலையில், பின்புறம் இருந்து இரும்பு ராடால் பலமாக அடித்திருக்கின்றனர் ராஜேஷும், அமீர் பாஷாவும். அதில் சுருண்டு விழுந்த சம்பத்தின் மீது காரை ஏற்றி, தலையை சிதைத்திருக்கிறார்கள்” என்றனர். அதன்பிறகு விபத்து என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி மூவரையும் கைது செய்தனர் சிதம்பரம் போலீஸார். 

அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்த மூவரும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் டி.எஸ்.பியாக இந்த குற்றாவாளிகளை கண்டுபிடித்த ராஜாராமன்தான் தற்போது கடலூர் மாவட்ட எஸ்.பியாக இருக்கிறார். அதனால் தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்படி, சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதிக்கு உத்தரவிட்டார் எஸ்.பி ராஜாராமன். அதையடுத்து சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அமைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் தலைமறைவாக இருந்த அமீர் பாஷாவை செய்து சிறையில் அடைத்த அந்த டீம், தற்போது பெங்களூருல் பதுங்கி குடும்பம் நடத்திக் கொண்டிருந்த கிரண் ரூபினியையும், அவரது காதலர் ராஜேஷையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.