திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சாமராயபட்டியில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேல். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாக்கு விவசாயம் செய்து வருகிறார். இங்கு விளையும் பாக்குகளை, கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த முஸ்தபா (52) என்பவர், வேன் மூலம் கடந்த வியாழக்கிழமை இரவு எடுத்துச் சென்றார். இவரது வாகனம், உடுமலை அருகே உள்ள மலையாண்டிகவுண்டனூர் நால்ரோடு அருகே சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், முஸ்தபாவின் வேனை வழிமறித்துள்ளனர்.
வேனை ஓட்டுநர் நிறுத்தியபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவர் ஓட்டுநரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, ரூ.3,000 பணம் மற்றும் அவரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து உடுமலை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுகுமாறன் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலுவின் தோட்டத்திலிருந்து முஸ்தபா பாக்குகளை கேரளத்துக்குக் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். வியாழக்கிழமை வழக்கம்போல் பாக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போதுதான், இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் ஏர்-கன் வகை துப்பாக்கியை வைத்து ஓட்டுநரை மிரட்டி பணத்தையும், செல்போனையும் பறித்துள்ளனர்.
அப்போது, அவ்வழியே வந்த சிறப்பு அதிரடிப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர், கொள்ளையர்களை விரட்டியுள்ளார். அதில், துப்பாக்கியைப் போட்டுவிட்டு இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டனர். இதுதொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது உடுமலையை அடுத்த கிழுவங்காட்டூரைச் சேர்ந்த நாதன் (24), மதுரையைச் சேர்ந்த அஜித் குமார்(26), பாண்டி (25) ஆகிய மூவர் என்பது தெரியவந்தது. அஜித்குமார், பாண்டி மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாதன் போக்சோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அஜித்குமார், பாண்டி ஆகியோர் பழக்கமாகியுள்ளனர்.
மூவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில், நாதனைப் பார்க்க அஜித்குமாரும், பாண்டியும் உடுமலைக்கு வந்துள்ளனர். செலவுக்கு கையில் காசு இல்லாததால் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடலாம் என திட்டமிட்டபோதுதான், கேரள பதிவு எண் கொண்ட முஸ்தபாவின் வாகனத்தைப் பார்த்துள்ளனர். அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஏர் கன் எப்படி கிடைத்தது? அதை யாரிடம் இருந்து வாங்கியுள்ளார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.