சென்னை: “அப்பன் என்று கூறியது கெட்ட வார்த்தையா? நிதியமைச்சரின் மரியாதைக்குரிய, வணக்கத்துக்குரிய அப்பா என வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவுரைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அடக்கமாக இருக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?” என்ற கேள்விக்கு, “நான் எதாவது கெட்ட வார்த்தையை பயன்படுத்தினேனா, மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம் மரியாதையாகத்தான் கேட்கிறேன். என்னுடைய சொந்த செலவுக்காக கேட்கவில்லை. இதனை பேரிடராக அவர் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறார்.
சமூக வலைதளத்தில் நான் ஒரு பதிவை பார்த்தேன். ‘பாஜகவின் 9 வருட ஆட்சியே பேரிடர் என்பதால் இதனை பேரிடராக கருதவில்லை’ என ஒருவர் எழுதியிருந்தார். மத்தியக் குழு வந்து ஆய்வு செய்து தமிழக அரசை பாராட்டிச் சென்றது. ஆனால், பாஜக இதனை அரசியலாக்க பார்க்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள் மற்றும் தென் மாவட்டத்தில் குறிப்பாக தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் அந்த மக்கள் பாதிப்பிலிருந்து வெளியே வரவில்லை. ஆகவே, நாம் செலுத்தும் வரியைத்தான் தேவைப்படும்போது கேட்கிறோம். எங்களுக்கு நிதி வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை மரியாதையாக்கத்தான் கேட்கிறேன். அப்பன் என சொன்னது கெட்ட வார்த்தையா? நிதியமைச்சரின் மரியாதைக்குரிய, வணக்கத்துக்குரிய அப்பா என வேண்டுமானால் சொல்லிக்கொள்கிறேன். மழை தொடங்கியதற்கு முன்பே நான் களத்தில் இருந்தேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. முதல்வரும் களத்தில் இருந்தார். நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் தூத்துக்குடிக்குச் செல்ல இருக்கிறேன்” என்றார் உதயநிதி.
முன்னதாக, டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேசினார். அப்போது அவர், “‘உன் அப்பன் வீட்டு பணமா’ என்பது போல உதயநிதி ஸ்டாலின் கூறியது பற்றி கேட்கிறீர்கள். இதுபோன்ற பேச்சுகள் அரசியலில் நல்லதல்ல. அவர் அரசியலில் இன்னும் முன்னுக்கு வர ஆசைப்படுகிறார். அந்த குடும்பமும் ஆசைப்படுகிறது. நாம் பேசும் மொழி முக்கியம். அவரது தாத்தா எப்பேர்ப்பட்ட தமிழ் அறிஞர். எனவே, நம் நாக்கில் அந்த பதவிக்கு ஏற்ற அளவில் வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுப்படையாக கூறுகிறேனே தவிர, அவர் மீது காழ்ப்புணர்வு கொண்டு கூறவில்லை.
மழையில் மக்கள் அவஸ்தைப்படும்போது, அனுப்பி வைத்த தொகை மத்திய அரசுடையதா என பேசுவது சரியல்ல. ரூ.900 கோடியை முன்கூட்டியே கொடுத்து விட்டோம். அவரது அப்பாவும் வந்து பிரதமரை பார்த்துவிட்டு வந்துள்ளார். அவரும் ஏதாவது செய்வார். எனவே, உதயநிதி ஸ்டாலின் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். வாய் வார்த்தையும், பொறுமையும் நல்ல குணங்கள்” என்று நிர்மலா சீதாராமன் கூறியது குறிப்பிடத்தக்கது.