சபரிமலை:சபரிமலையில் மண்டல பூஜைக்காக தங்க அங்கி பவனி இன்று காலை ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது. கூட்டம் அலைமோதுவதால் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சபரிமலையில் டிச., 27-ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் இருந்து இன்று காலை புறப்படுகிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று பக்தர்கள் தரிசனத்திற்கு பின்னர் டிச.,26 மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடையும்.
மாலை 3:00 மணிக்கு தலைச்சுமையாக சன்னிதானம் கொண்டுவரப்படும். அன்று மாலை நடைபெறும் தீபாராதனையின் போதும், டிச.,27-ல் நடைபெறும் மண்டல பூஜையின் போதும் இந்த அங்கியுடன் ஐயப்பன் அருள்பாலிப்பார்.
மண்டல பூஜைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு 10 முதல் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்பாச்சி மேடு, மர கூட்டம், சரங்குத்தி ஆகிய இடங்களில் பக்தர்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அதன் பின்னரே இவர்கள் பெரிய நடை பந்தலுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கும் ஒரு மணி நேரம் கீழ் நின்ற பின் தான் படி ஏறி தரிசனம் செய்ய முடிகிறது.
படியேற்றுவதில் போலீசார் மீண்டும் தொய்வடைந்துள்ளதால் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் குழந்தைகளும் முதியவர்களும் பெண்களும் அதிகமாக இருக்கும் போது பொறுமையாக தான் செயல்பட வேண்டி இருக்கிறது என்று போலீசார் விளக்கம் அளிக்கின்றனர். இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
தரிசனத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சன்னிதானம் போலீஸ் எஸ். பி. சுதர்சனன் தெரிவித்தார். சாலக்கயம் முதல் சன்னிதானம் பாண்டித்தாவளம் வரை 76 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement