துபாய்: இந்திய பெருங்கடல் பகுதியில், இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, பயங்கரவாதிகள், ‘ட்ரோன்’ வாயிலாக தாக்குதல் நடத்தினர். இதில், அந்தக் கப்பலில் இருந்த, 21 இந்தியர்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. அதை ஒட்டியுள்ள ஏமன் நாட்டில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அவ்வப்போது, இஸ்ரேல் மீது ஹவுதி படையினரும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செங்கடல் பகுதி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது, ஹவுதி படையினர் தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் நேற்று செங்கடல் வழியாக சென்றது.
அப்போது, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக, ஹவுதி படையினர் அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அந்தக் கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. உடனடியாக அது அணைக்கப்பட்டதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
இந்த கப்பலில், 21 இந்தியர்களும் பணியாற்றி வருவதாக தெரிகிறது. இதையடுத்து, நம் கடற்படையின் விமானங்கள் அங்கு விரைந்து சென்று நிலைமையை கண்காணித்தன. மேலும், கடற்படை கப்பல் அங்கு விரைந்துள்ளது.
இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறியதாவது:
அந்த கப்பல், நம் நாட்டின் மங்களூருக்கு வந்து கொண்டிருந்தது. தாக்குதல் நடந்தது குறித்து, மின்னஞ்சல் வாயிலாக, கப்பலில் இருந்து உதவி கோரப்பட்டதை அடுத்து, நம் கடற்படையினரும், விமானப்படையினரும் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement