Kejriwal was again summoned by the Enforcement Directorate | கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அமலாக்கத் துறை அனுப்பியது

புதுடில்லி:மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஜன. 3ல் ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

டில்லி அரசின் 2021- 2-022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, புதிய கொள்கையை ரத்து செய்த கவர்னர் சக்சேனா, இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன.

துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நவம்பர் 2ம் தேதி ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், இது சட்டவிரோதமான விசாரணை எனக்கூறி கெஜ்ரிவால் அதை நிராகரித்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது. அதையும் நிராகரித்த கெஜ்ரிவால், ஏற்கனவே தான் திட்டமிட்டு இருந்தபடி 10 நாள் விபாசனா தியானப் பயிற்சிக்கு நேற்று முன் தினம் மதியம் 1:30 மணிக்கு பஞ்சாபுக்குச் சென்றார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக நேற்று அனுப்பியுள்ள சம்மனில், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஜன. 3ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.