தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 58 கிராமங்கள் திட்ட கால்வாய்க்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். அதன் பிறகு வைகை அணைக்கு வந்த அதிமுக முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வலது கரையில் இருந்து 58ஆம் கால்வாயில் வெளியேறும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “வைகை அணையில் போதியளவு தண்ணீர் இருந்தும் திமுக அரசு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் வைகையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மட்டுமின்றி அதிமுக சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. திமுக அரசு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் அணைகளில் தண்ணீர் இருந்தும் போராட்டம் நடத்தி தான் பாசனத்திற்காக தண்ணீர் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை பாதிப்புகளால் 35 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு தலைமை செயலாளர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ஆனால் தூத்துக்குடியில் மட்டும் 35 பேர், திருநெல்வேலியில் 15 பேர் என இதுவரை 57பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வருகின்றன. மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இருக்கிறதா அல்லது அறியாமையா எனத் தெரியவில்லை. தலைமைச் செயலாளரின் அறிக்கையில் வேறுபாடு இருப்பதால் உயிரிழந்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு உரிய முறையில் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உரிய ஆய்வு நடத்தி மாநில அரசு முறையான அறிக்கை வெளியிட வேண்டும்.

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்த தென் மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு அப்பகுதி மக்களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். முதல்வரின் அறிவிப்பால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏரல் தொழில் நகரமே முற்றிலும் சிதைந்துள்ளது. மேலும் விவசாய நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டிருப்பது வெறும் புயல், மழை மட்டுமல்ல. நிலநடுக்கம், பூகம்பம் போன்றவற்றால் உண்டாகும் பாதிப்புகள் போல் தென் மாவட்டங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே தென் மாவட்டங்களுக்கான நிவாரணத் தொகையை கூடுதலாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழத்தில் 7ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். இயற்கை பேரிடரில் தாலுகா பேரிடர், மாவட்ட பேரிடர், மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் என்று ஏதும் இல்லை. புயல், மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்தியக்குழு ஆய்வு செய்து எவ்வளவு சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அறிவிக்கும். அதன்பிறகு தான், பாதிப்புகளின் சதவீதத்திற்கு ஏற்ப மத்திய அரசு நிவாரணம் விடுவிக்கும். தேசிய பேரிடர் என்று அறிவிப்பதற்கு முன்மாதிரியும் கிடையாது, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்பது ஏதும் கிடையாது.

பேரிடர் நடவடிக்கைகளில் வெள்ளம் வருவதற்கு முன் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ( pre disaster), நடப்பு நடவடிக்கை (during disaster), வெள்ளம் ஏற்படும் முன் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் (post disaster) என மூன்று வகைகள் உள்ளன. இதில் பேரிடர் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் மத்திய அரசின் பங்களிப்பாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பேரிடர் நிதி மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும். அந்த நிதி மொத்தமாக மாநில அரசிடம் இருப்பு இருக்கும். அதன் மூலம் முதற்கட்டமாக போர்க்கால அடிப்படையில் மாநில அரசு பேரிடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
வெள்ளம் ஏற்பட்ட பின் மத்திய குழு பாதிப்புகளை ஆய்வு செய்யும். இதனிடையே மாநில பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண நிதி அறிக்கையை ஆணையர் வழங்குவார். அதில் பேரிடருக்கான உடனடி தேவை மற்றும் நீண்ட கால தேவை என இரண்டு அறிக்கைகள் வழங்கப்படும். அதன்படி மத்திய அரசு முதற்கட்டமாக உடனடி நிதியை விடுவிக்கும். பொதுவாக அச்சமயத்தில் மாநில அரசு கேட்கும் நிதி முழுமையையும் மத்திய அரசு கொடுப்பதில்லை. அதிலிருந்து குறைவான அளவிலேயே நிதியே வழங்கும். அந்த வகையில் நீண்ட கால நிதியாக நகர்ப்புற மழைநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சுமார் 500 கோடியை தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதில் தேசிய பேரிடர் என்ற வழிகாட்டு நெறிமுறை என ஏதும் கிடையாது. ஒரு வேளை மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்காக தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருவதாக தெரிகிறது. மேலும் திமுகவினரும், அமைச்சர்களும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் எனக் கூறி வருவதை பார்க்கையில், 10ஆண்டு காலம் திமுக ஆட்சியில் இல்லாததால் தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும், பேரிடர் மேலாண்மையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அவர்கள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என இதன் மூலம் தெரிகிறது. எனவே பாதிப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் நிவாரண நிதி ஆணையர் அளிக்கும் அறிக்கை மற்றும் மத்திய குழுவின் ஆய்வறிக்கையை பொறுத்து தான் மத்திய அரசின் நிவாரண நிதி அறிவிக்கப்படும்: என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.