ராணுவக் காவலில் மூவர் இறப்பு; `கவனமுடன் செயல்படுங்கள்!' – வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ராஜ்நாத் சிங்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலுள்ள பஃபலோஸ் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று, இரண்டு இந்திய ராணுவ வாகனங்கள்மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் 9 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றது. அவர்களில் குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த சௌகத் அகமது, ஷபீர் அகமது உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக, அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மூன்று பேரின் இந்தச் சந்தேக மரணம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அந்த கிராமத்தின் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, அடையாளம் தெரியாத நபர்கள்மீது கொலை வழக்கு பதிவுசெய்திருக்கிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சென்ற மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஒவ்வொரு ராணுவ வீரரும் இந்தியாவின் ஒரு குடும்ப உறுப்பினரைப் போன்றவர். இப்படித்தான் ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள். யாராவது உங்களைக் காயப்படுத்தினால் எங்களால் அதைச் சகித்துக்கொள்ள முடியாது. இது போன்ற தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புத்துறை, உளவுத்துறை அமைப்புகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

எனவே, கண்காணிப்பை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதையும் அரசு வழங்கும். இது போன்ற தாக்குதல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பதை நான் அறிவேன். ஆனால் அதிக விழிப்புணர்வு தேவை என்றும் நினைக்கிறேன். உங்கள் துணிச்சல் எங்களுக்குப் பெருமை சேர்க்கிறது. உங்கள் தியாகத்துக்கு இணையாக எதுவுமில்லை. ஒரு ராணுவ வீரரின் இழப்புக்கு நாங்கள் எவ்வளவு இழப்பீடு வழங்கினாலும், அந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது.

எனவே, எங்கள் அரசின் முன்னுரிமைப் பட்டியலில் உங்களுக்கு எப்போதும் இடம் இருக்கிறது என உறுதியளிக்க விரும்புகிறேன். அதே நேரம் நீங்கள் நாட்டின் பாதுகாவலர்கள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர, மக்களின் இதயங்களை வெல்லும் பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. இந்தியரை எந்த வகையிலும் காயப்படுத்தக் கூடாது. எனவே, ராணுவ வீரர்கள் மக்களுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய ராணுவம்

பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றாலும், மக்களின் இதயங்களை வெல்வதும் ஒரு முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காக உங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். கவனமுடன் செயல்படுங்கள்” எனக் குறிப்பிட்டுக் கண்டித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.