சகோதரியிடம் நடிகர் சங்க வீட்டை பறிகொடுத்த நடிகை; கருணை இல்லத்தில் அடைக்கலம்

மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை பீனா கும்பலாங்கி. தன்னுடன் பிறந்த ஏழு சகோதர சகோதரிகளின் வாழ்க்கையையும் ஓரளவு செம்மைப்படுத்திவிட்டு 36 வயதில் தான் திருமணம் செய்தார். சில வருடங்களில் கணவரும் இறந்துவிட்டார். அந்த நிலையில் வசிப்பதற்கு சொந்த வீடு இல்லாமல் இருந்த பீனாவிடம் நடிகர் சங்க செயலாளர் இடவேள பாலு, உங்கள் பெயரில் இடம் இருந்தால் சொல்லுங்கள் நடிகர் சங்கத்திலிருந்து இலவசமாக வீடு கட்டித் தருகிறோம் என்று கூறினார். அந்த சமயத்தில் அவரது அண்ணன் தரப்பிலிருந்து மூன்று சென்ட் இடம் அவருக்கு கொடுக்கப்பட்டது. நடிகர் சங்கமும் சொன்னபடி இலவசமாகவே வீட்டை கட்டி தந்தது.

தனியாக இருக்கிறோமே என்று நினைத்த பீனா தன்னுடைய இளைய சகோதரி ஒருவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் கஷ்டப்படுவதை கண்டு அவருக்கு உதவியாகவும் தனக்கும் துணையாக இருக்கட்டுமே என தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்தார். இந்த நிலையில் தான் தங்கையும் தங்கை கணவரும் பீனாவிடம் இந்த வீட்டை இப்போதே எங்களுக்கு எழுதிக் கொடுங்கள் என மனரீதியாக டார்ச்சர் செய்து ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறும்படி கடுமையாக நிர்பந்தித்தனர்.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்க கடைசியாக தனக்கு தெரிந்த சமூக சேவகர் சீமாவுக்கு போன் செய்து பீனா விவரம் சொல்ல, சீமா அவரை அழைத்துச் சென்று தான் நிர்வாக உறுப்பினராக உள்ள கருணை இல்லம் ஒன்றில் சேர்த்து தங்க வைத்திருக்கிறார். இனி தங்கையுடன் வீட்டுக்காக போராட முடியாது என்றும் என் மீதி வாழ்நாட்களை இந்த கருணை இல்லத்திலேயே கழித்து விடுகிறேன் என்றும் விரக்தியுடன் கூறியுள்ளார் நடிகை பீனா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.