Putin congratulates Modi for winning the Lok Sabha elections! | லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற புடின்…வாழ்த்து! : � ரஷ்யா வரும்படியும் அழைப்பு


மாஸ்கோ, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், என் நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடி வெற்றி பெற வாழ்த்துகள்’ என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐந்து நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.

கடந்த 25ம் தேதி ரஷ்யா சென்ற அவர், அந்நாட்டு துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்து பேசினார். பின், தலைநகர் மாஸ்கோவில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவையும் சந்தித்தார்.

அப்போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் பிரச்னைகள், அனைத்து துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, வடக்கு – தெற்கு இடையிலான சர்வதேச போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மகிழ்ச்சி

பின், கிரெம்ளின் மாளிகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது, ‘பிரதமர் மோடி ரஷ்யா வர வேண்டும்’ என, புடின் அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

உலகம் முழுதும் நடக்கும் அனைத்து கொந்தளிப்புகளையும் மீறி, ஆசியாவில் உள்ள உண்மையான நண்பரான இந்தியாவுடனான உறவு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் நண்பரான இந்திய பிரதமர் மோடியை, ரஷ்யாவில் பார்க்க விரும்புகிறோம்; இந்த விபரத்தை தயவு செய்து அவரிடம் தெரிவியுங்கள்.

அவருடைய பயணத்தின் போது, இரு தரப்பு உறவால் ஏற்படும் வாய்ப்புகள் மற்றும் தற்போதைய பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியும்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அந்தத் தேர்தலில் மோடி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்திய அரசியலில், எந்த விதமான அணிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய முறையிலான நட்புறவு நீடிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்ய அதிபருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளித்ததாக தன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அமைச்சர்கள், முன்னணி தொழிலதிபர்கள், முக்கிய பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்னைகளுக்கு, பேச்சுவார்த்தை வாயிலாகவே முடிவுகாண வேண்டும் என, தொடர்ந்து நம் நாடு வலியுறுத்தி வருகிறது.

போர் முடிவு

இரு நாட்டு அதிபர்களான புடின் மற்றும் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோரை சந்தித்த போது, போர் குறித்து விவாதித்த பிரதமர் மோடியும், போர் முடிவுக்கு வர தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்ய தயார் என்றும் உறுதியளித்தார்.

இந்நிலையில்தான், ரஷ்யா வரும்படி, பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

‘உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண, பிரதமர் மோடி நேரில் வர வேண்டும்’ என்றும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பின் போது, அதிபர் புடின் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது: உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க, பிரதமர் மோடி தயாராக இருப்பதை நான் அறிவேன். இந்த விஷயத்தில், உரிய ஒத்துழைப்பு வழங்க ரஷ்யாவும் தயாராக உள்ளது. உக்ரைனில் உள்ள நிலைமை குறித்து, மோடியிடம், நான் பலமுறை தெரிவித்துள்ளேன். தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய அவர் தயாராகவும் உள்ளார்.இவ்வாறு புடின் கூறினார்.

அதிபருடனான சந்திப்புக்கு பின், அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:பிரதமர் மோடியும், அதிபர் புடினும் அடுத்த ஆண்டு நடைபெறும், இந்திய – ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டின் போது சந்திப்பர் என நம்புகிறேன். இரு தலைவர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதுவரை, 21 ஆண்டுகளாக உச்சி மாநாடுகள், இந்தியாவிலும், ரஷ்யாவிலும் நடந்துள்ளன. கடைசி உச்சி மாநாடு 2021 டிசம்பரில், புதுடில்லியில் நடந்தது. ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் உயர் தொழில்நுட்ப வர்த்தகம் அதிகரித்து வருவதாக அதிபர் புடின் தெரிவித்தார். இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், இரண்டாவது ஆண்டாக நிலையான வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட அதிகமாகவே இருக்கிறது. இதன் வாயிலாக இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு வலுவாகவே உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.