இன்று காலை முதல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்தின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின் நடிகர் கமல், விஜயகாந்த் குறித்து உருக்கத்துடன் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கமல், “எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரே மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும் என்றால் அது விஜயகாந்த்தான். ஆரம்பத்தில் நட்சத்திர அந்தஸ்து வரும்முன் எப்படி என்னுடன் பழகினாரோ அப்படித்தான் இத்தனை பெரிய நட்சத்திர அந்தஸ்து வந்த பின்னும் பழகினார். அவரிடம் எனக்குப் பிடித்தது, அவரிடம் எந்த அளவு பணிவு இருக்கிறதோ அந்த அளவிற்கு நியாயமான கோபமும் இருக்கும்.
அந்தக் கோபத்தின் ரசிகன் நான். அதனால்தான் அவர் மக்கள் பணிக்கு வந்ததாக நான் நினைக்கிறேன். என்னை மாதிரியான ஆட்களுக்கு இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது ஒருவித தனிமைதான். நல்ல நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு நான் செல்கிறேன்” என்றார்.

குடும்பத்துடன் அஞ்சலி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் பிரபு, “என் அப்பா சிவாஜி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கடைசி வரை உறுதுனையாக நின்றவர் விஜயகாந்த் அண்ணன். நான் செய்ய வேண்டிய கடமையை அன்றைக்கு விஜயகாந்த் அண்ணன் செய்தார். அன்று கடைசிவரை நின்று சிவாஜியை நல்லடக்கம் செய்தபிறகு என் அம்மாவைப் பார்த்து எல்லாத்தையும் ஒப்படைத்து விட்டுத்தான் சென்றார் விஜயகாந்த் அண்ணன். அவரும் சிவாஜிக்கு ஒரு மகன்தான். அந்த நன்றிக்காக நாங்கள் குடும்பத்துடன் வந்து அவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அவரை நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தப் போகிறோம்” என்று கூறினார்.