குணா மத்திய பிரதேசத்தில், டிப்பர் லாரி மீது மோதிய பஸ் தீப்பிடித்து எரிந்ததில், ௧௩ பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள குணா – ஆரோன் சாலையில், நேற்று முன்தினம் இரவு 30 பயணியருடன் சென்ற தனியார் பஸ், எதிரே வந்த டிப்பர் லாரி மீது திடீரென மோதியது.
இதில், பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் பயணித்தவர்களில், நான்கு பேர் உயிர் தப்பினர்; ௧௨ பேர் உடல் கருகி பலியாகினர். 14 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை மேலும் ஒரு சடலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
அது, டிப்பர் லாரியின் டிரைவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா, ௪ லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
காயமடைந்தவர்களுக்கு, ௫௦,௦௦௦ ரூபாய் தரப்படும் என, மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்; அத்துடன், குணா நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.
அது மட்டுமின்றி, அலட்சியமாக செயல்பட்ட போக்குவரத்து அதிகாரி ரவி பரேலியா, குணா மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி கத்ரோலியா ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலில், விபத்து குறித்து விசாரணை நடத்த கூடுதல் கலெக்டர் முகேஷ் குமார் சர்மா தலைமையில் நான்கு பேர் குழுவை, குணா மாவட்ட கலெக்டர் தருண் ரதி அமைத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement