ஜெய்ப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உள்பட 22 பேர், ராஜஸ்தான் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். ஜெய்ப்பூரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அடைனவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில், 12 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 5 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
கிரோடி லால் மீனா, மதன் திலாவர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கஜேந்திர சிங் கின்ஸ்சார், பாபுலால் கராடி, ஜோகாராம் பாடேல், சுரேஷ் சிங் ராவத், அவினாஷ் கெலோட், ஜொராராம் குமாவத், ஹேமந்த் மீனா, கன்ஹையா லால் சவுத்ரி, சுமித் கோதரா ஆகியோர் கேபினெட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சஞ்சய் ஷர்மா, கவுதம் குமார், ஜாபர் சிங் கர்ரா, சுரேந்திர பால் சிங், ஹீராலால் நாகர் ஆகியோர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னதாக, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் பஜன்லால் ஷர்மா டெல்லி சென்றிருந்தார். பாஜக உயர் தலைவர்களின் அனுமதியுடன் அவர் தனது புதிய அமைச்சரவையை உருவாக்கி இருக்கிறார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டன. தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாஜக பெற்றது. இதையடுத்து, முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினரான பஜன்லால் ஷர்மா, முதல்வராக கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டார். தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டனர்.