
புத்தாண்டு அப்டேட்களில் முந்திய விஜய்யின் 'கோட்'
2024ம் ஆண்டு பிறந்ததையொட்டி பல்வேறு திரைப்படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டார்கள். அவற்றில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக விஜய்யின் 68வது படம் இருந்தது. ஏற்கெனவே வெளியான தகவலின்படி படத்திற்கு 'கோட்' என்ற பெயரையே வைத்திருந்தார்கள். படத்திற்கு ஆங்கிலத்தில் நீளமாக 'The Greatest Of All Time' என வைத்துள்ளார்கள். அதன் சுருக்கமாக 'தி கோட்' என்று ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
டிசம்பர் 31ம் தேதியன்று முதல் பார்வையும், நேற்று புத்தாண்டு தினத்தன்று இரண்டாவது பார்வையும் வெளியிட்டார்கள். இரண்டு போஸ்டர்களுமே ஹாலிவுட் படங்களைப் போல டிசைன் செய்யப்பட்டு பார்ப்பதற்கு ஒரு 'கேம் போஸ்டர்' போலவும் கூட இருந்ததாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.
இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனது பெயரைப் போடும் போது 'ஏ வெங்கட் பிரபு பிலிம்' என்ற அர்த்தத்தில் இந்தப் படத்திற்கு 'ஏ வெங்கட் பிரபு ஹீரோ' எனப் போட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
புத்தாண்டை முன்னிட்டு பல படங்களின் அப்டேட்கள் வெளிவந்தாலும், பரபரப்பை ஏற்படுத்தியதில் 'தி கோட்' முன்னணியில் இருக்கிறது. அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் ஏதாவது வரும் என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு வழக்கம் போல ஏமாற்றமே கிடைத்தது.