ஜனவரி 06 ஆம் திகதி முதல், 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி மேலதிக டோஸ்…

தெரிவு செய்யப்பட்ட 09 மாவட்டங்களில் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி மேலதிக டோஸ் ஒன்றை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் ஜனவரி 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பிரதம தொற்றுநோய் நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐரோப்பிய மற்றும் தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தற்போது சின்னமுத்து தொற்றுநோய் உலகலாவிய ரீதியாக பரவி வருவதாகவும் அவர் கூறினார்.

கொவிட் காலத்தில்;, சிறுவர் தடுப்பூசித் திட்டம் முழுவதும் உலகலாவிய ரீதியில் பெரும் சரிவை சந்தித்தது, இதன் விளைவாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில்; உலகெங்கிலும் உள்ள 25 மில்லியன் இரண்டு வயது குழந்தைகள் எந்தவொரு சிறுவர் தடுப்பூசி டோஸையும் பெறவில்லை என்றும், மேலும் 15 மில்லியன் பேர் பகுதியளவில் தடுப்பூசயை பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் எதிர்காலத்தில் சின்னமுத்து போன்ற தொற்றுநோய்களுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகிறது. சின்னமுத்து என்பது அதிக பரவும் விகிதத்தைக் கொண்ட தொற்று நோயாகும். ஒரு சின்னமுத்து நோயாளியினால் 16 பேருக்கு அந்நோய் பரவும் திறன் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா போன்ற நமது அண்டை நாடுகளில் சின்னமுத்து ஒரு பெரிய தொற்றுநோயாக பரவி வருவதாகவும், எமது நாட்டில், கொவிட் காலத்திலும், உகந்த அளவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டத்தை வழங்க முடிந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி, முதல் சின்னமுத்து நோயாளி இலங்கையில் பதிவாகியுள்ளதாகவும், ஆரம்ப கட்டங்களில் பதிவாகியுள்ள பெரும்பாலான சின்னமுத்து நோயாளிகள் சிறுவயது தடுப்பூசிகளை முறையாகப் பெறாதவர்கள் என்றும் மருத்துவர் வலியுறுத்தினார்.

இதுவரை பதிவாகியுள்ள 740 சின்னமுத்து நோயாளர்களில் 49% கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதம தொற்றுநோய் நிபுணர் சமித்த கினகே, இரண்டாவது அதிகூடிய நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, சின்னமுத்து நோய் பரவியுள்ள மற்றும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத இடங்களை கண்டறிந்த 9 மாவட்டங்கள் இந்த தடுப்பூசி வழங்க தெரிவு செய்யப்பட்டுள்ளன. இது 6 முதல் 9 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மேலதிக டோஸாக வழங்கப்படும்; என்றும், அந்த குழந்தைகள் உரிய வயதை எட்டியதும் உரிய அளவு டோஸை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை முதன்மையாகக் கொண்டு ஜனவரி 06 ஆம் திகதி ஒரு நாள் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், அன்றைய தினம் இந்த மாவட்டங்களின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.