தங்கம் விலை சமீப நாள்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் தங்கம் விலை சுமார் 11 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டில் தங்கம் விலை கிராமுக்கு 7,000 ரூபாயை தொட்டு புதிய உச்சம் அடையும் என அகில இந்திய ரத்தினக் கற்கள் மற்றும் நகை கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து கவுன்சிலின் தலைவர் சையாம் மேஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரக்கு விலை உயர்வு, வட்டி விகிதம் உயர்வு போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் நிதிச் சந்தைகள் சூடாகி வருகின்றன.
இந்தச் சூழலில், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், பணவீக்கத்தை தாண்டிய வருமானம் தரும் சொத்தாகவும் 2024 ஆண்டிலும் நீடிக்கும். பொருளாதார நிச்சயமற்ற நிலையாகும், சர்வதேச அரசியல் பதற்றத்தாலும் தங்கம் விலை உயரும்.
2024-ம் ஆண்டில் தங்கம் விலை 10 கிராமுக்கு 70,000 ரூபாயாக உயர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரப் பிரச்னைகள் மேலும் மோசமடைந்தால், தங்கத்துக்கு டிமாண்ட் அதிகரித்து எதிர்பார்த்ததைவிட விலை மேலும் உயரும்.
அமெரிக்க வட்டி விகிதம் நிறுத்தம், சர்வதேச அரசியல் பதற்றம், அதிக பணவீக்கம் போன்ற காரணங்களால் 2023-ம் ஆண்டில் மற்ற சொத்துகளைவிட தங்கம் அதிக வருமானம் கொடுத்திருக்கிறது. 2023 ஆண்டில் தங்கம் 13 சதவிகித வருமானம் கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜனவரி 2-ம் தேதி சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 47,360 ரூபாயாக உள்ளது.