ராமர் கோயில் திறப்பு: `மற்றொரு கோத்ரா சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது' – காங்., எம்.எல்.சி சர்ச்சை!

ஜனவரி மாதம் 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பூஜைகள் 16-ம் தேதி தொடங்குகின்றன. இந்த விழாவுக்காக அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த 4,000 துறவிகளுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை, உள்ளூர் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

அயோத்தி ராமர் கோயில்

இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.சி பி.கே ஹரிபிரசாத்,“கர்நாடகா அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். குஜராத்தில் பாபர் மசூதி இடிப்பதற்காகச் சென்ற கர சேவர்கர்களின் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது போன்ற மற்றொரு சம்பவம் அயோத்தி கோயில் திறப்பு விழாவில் அரங்கேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கர்நாடகாவில் அசம்பாவித சம்பவங்களுக்கு இடமளிக்கக் கூடாது. அயோத்திக்கு செல்ல விரும்புபவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.

எனவே, கர்நாடகாவில் இன்னொரு கோத்ரா கொடூரத்தை நாம் பார்க்கக் கூடாது. சில அமைப்புகளின் தலைவர்கள் சில மாநிலங்களுக்குச் சென்று சில பா.ஜ.க தலைவர்களைத் இதுபோன்ற சம்பவம் அரங்கேற்ற தூண்டிவிடுகிறார்கள். ஆனால் அதை என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. இதுபோன்ற செயல்பாடுகள் அந்தக் கட்சிக்குப் புதிதல்ல. அவர்களால் எதையும் செய்ய முடியும். எனவே, அயோத்திக்கு வருகை தரும் அனைத்து மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசியல் ஆதாயங்களைவிட மக்களின் வாழ்க்கையே முக்கியம்.

காங்கிரஸ் எம்.எல்.சி பி.கே ஹரிபிரசாத்

ஒரு இந்து தர்மகுரு, ராமர் கோவிலை திறந்து வைத்தால், நீங்களும் நானும் எந்த அழைப்பின்றியும் அயோத்திக்கு சென்றிருப்போம். ஆனால், அதை திறந்து வைக்கும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்துதர்ம குருவல்ல. அவர்கள் அனைவரும் அரசியல் தலைவர்கள். அதனால்தான் இந்த விழாவை கவனமாக கையாளவேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் எம்.எல்.சி ஹரிபிரசாத்தின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஹரிபிரசாத்தின் கருத்துக்கு பதிலளித்த பா.ஜ.க தலைவரும் முன்னாள் முதல்வருமான டி.வி.சதானந்த கவுடா,“ஹரிபிரசாத் மீது புகார் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். அவரின் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது. மிக நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்த கோத்ரா விவகாரம், தற்போது சுமுகமான தீர்வை எட்டியிருக்கிறது. என்.ஐ.ஏ மூலம் வழக்கு கையாளப்பட்டது.

டி.வி.சதானந்த கவுடா

மேலும், நீதிமன்ற தீர்ப்பும் வந்துவிட்டது. ஆனாலும், ஹரிபிரசாந்த் அயோத்திக்கு செல்லும் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வை உருவாக்கலாம் என நினைக்கிறார். இது மிகவும் அநியாயமான, மிகவும் ஆபத்தான, சகிக்க முடியாத கருத்து. எனவே, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ டி.எஸ் ஸ்ரீவத்சா,“கோத்ரா ரயில் எரிப்பின் போது மத்தியில் காங்கிரஸ் அரசுதான் இருந்தது. அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே… தற்போதைய மத்திய அரசு சட்டப்பிரிவு 370ஐ நீக்கவில்லை. காங்கிரஸ் தான் காஷ்மீர் விவகாரத்தில் ஒற்றைக் கல்லை வீசியது. எனவே, ஹரிபிரசாந்த் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து அறிக்கை விடுகிறார். அவரை உடனே கைது செய்ய வேண்டும்” எனக் காட்டமாக பேசினார்.

கே.எஸ்.ஈஸ்வரப்பா

கர்நாடக பா.ஜ.க தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா,“பி.கே. ஹரிபிரசாத் போன்ற தலைவர்கள் இந்த வகையான வார்த்தைகளைப் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அயோத்திக்கு வரும் பக்தர்களை ராமரே காப்பாற்றுவார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. குஜராத் மாநிலம், கோத்ரா நகருக்கு வந்தபோது, அந்த ரயிலில் கரசேவகர்கள் பயணித்த இரண்டு பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. அங்கு பற்றிய தீ, பல மாநிலங்களிலும் வன்முறையாக வெடித்து, எண்ணற்ற உயிர்களைப் பறிக்க காரணமானது. அப்போது அரங்கேறிய கொலை, கொள்ளை, வன்முறை நிகழ்வுகள், இந்திய வரலாற்றில் அழியாத கரையாகவும் ஆறாத வடுவாகவும், இன்றளவும் அச்சத்தை, ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.