பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களாக பாலஸ்தீனம்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இதில், 22,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கும் சூழலில், ஹமாஸை அழிக்கும் வரை போர் நீடித்துக்கொண்டே இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். இடையில், ஹமாஸ் தாங்கள் சிறைபிடித்துவந்த இஸ்ரேலைச் சேர்ந்த 200 பணயக் கைதிகளைக் குறிப்பிட்ட அளவில் வெளியிட்டவரை, சில நாள்கள் போரை இஸ்ரேல் நிறுத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 30-ம் தேதி பணயக் கைதிகள் விடுவிப்பின்போது ஹமாஸிடமிருந்து வெளிவந்த இஸ்ரேலிய-பிரெஞ்சு பெண் ஒருவர், ஹமாஸைச் சேர்ந்த நபர் தன்னை இதனால்தான் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என, அங்கு தனக்கு நேர்ந்தது குறித்து விவரித்திருக்கிறார். மியா ஸ்கெம் (Mia Schem) என்றறியப்படும் அந்த 21 வயது பெண், இஸ்ரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதுபற்றி பேசியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில், தான் கடத்திச் செல்லப்பட்டதுமுதல் விவரித்த மியா ஸ்கெம், “அன்று தப்பியோட முயற்சித்தபோது, என் கார்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கார் எரியத் தொடங்கியது. அப்போது, அங்கேயே காருடன் எரிவதா இல்லை துப்பாக்கி ஏந்திய நபருடன் செல்வதா என்ற நிலையில், இறுதியில் அவரிடம் சரணடைந்தேன். வினாடியில் எடுக்கப்பட்ட முடிவு அது. பின்னர், டிரக் மூலமாக காஸாவுக்கு அழைத்துச்செல்லப்பட, அங்கிருந்து ஹமாஸ் துப்பாக்கிதாரி வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டேன். ஒரு இருள் சூழ்ந்த அறையில் அடைக்கப்பட்டேன். பேசவோ, பார்க்கவோ, எதையும் கேட்கவோ அனுமதிக்கப்படவில்லை. ஒருவர், 24/7 என எந்நேரமும் பார்த்துக்கொண்டே இருந்தார். கண்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிவிடுவோமோ, இறந்துவிடுவோமோ என்று பயந்தேன்.

இருப்பினும், வீட்டில் அந்த நபரின் மனைவி இருந்தது ஒரு நிம்மதியைத் தந்தது. அவரின் மனைவி தன் குழந்தைகளுடன் அறைக்கு வெளியே இருந்தார். அதனால்தான், அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. அதேசமயம், நானும், அந்த நபரும் ஒரே அறையில் இருந்ததை அவரின் மனைவி வெறுத்தார். அங்கிருந்த 54 நாள்களில், அவரின் மனைவி பொம்மையாக இருந்தார். எனக்கு உணவளிக்காமல், தன் கணவருக்கு மட்டுமே அவர் உணவளித்தார். மோசமான கண்களைக் கொண்ட மிகவும் மோசமான பெண் அவர்” என்றார். மேலும், அங்கிருந்த நாள்களில் ஒருநாள், அந்த துப்பாக்கிதாரி தன்னுடைய மனைவியைக் காதலிக்கவில்லை என தன்னிடம் கூறியதாகவும் மியா ஸ்கெம் தெரிவித்தார்.