உச்ச நீதிமன்றம் 2019-ல் அனுமதி வழங்கியதும் அயோத்தியில் தொடங்கப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே, ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை, பா.ஜ.க-வின் தேர்தல் நோக்கம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இத்தகைய சூழலில், ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்ட அதே ஆண்டில் பா.ஜ.க கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) மசோதாவை, நான்காண்டுகளாக இல்லாமல் இப்போது லோக் சபா தேர்தல் நெருங்கும் சூழலில், அதனை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரம் காட்டிவருகிறார்.

நேற்று முன்தினம்கூட, `லோக் சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகள் வெளியிடப்படும்’ என அரசு மூத்த அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேர்தல் ஆதாயத்துக்கான கருவியாக பா.ஜ.க பயன்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சாடியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய சீதாராம் யெச்சூரி, “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகள் ஏன் இத்தனை ஆண்டுகளாக வகுக்கப்படவில்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துவதன் மூலம், தேர்தல் ஆதாயத்துக்கான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த, தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விதிகளை அறிவிக்க விரும்புகிறார்கள் அவர்கள்(பாஜக).

இதுவே அவர்களின் தெளிவான நோக்கம். இதன் விதிகள், அறிவிப்புகள் ஆகியவை தேர்தல் ஆதாயங்களுக்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.

அதேபோல், AIMIM-ன் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “குடியுரிமை திருத்தச் சட்ட என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இது மத அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டம். இதனை, இந்த நாட்டில் உங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான நிபந்தனைகளை விதிக்கும் NPR-NRC உடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், முஸ்லிம்கள், தலித்துகள், ஏழைகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாக அது அமையும்” என்று கூறினார்.
மேலும், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “இதுபோன்ற அறிவிப்புகள் சில சமயம் பலூன்கள் போல வெளிப்படும். ஆனால், எதுவுமே நடக்காது. தேர்தல்கள் நெருங்கும்போது இந்து – முஸ்லிம் போன்ற பிரச்னைகள்கூட வரலாம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.