`இந்தாங்க கிஃப்ட்!' – 50 கார்கள் புத்தாண்டுப் பரிசு;மேலும் ஓர் ஆச்சர்யம்; IT கம்பெனி செய்ததென்ன?

‘இந்த வருஷம் என்ன கார் வாங்கப் போறோம்னு தெரியலை; எந்த எம்ப்ளாயி ஓனர் ஆகப் போறாருனு தெரியலை’ என்று ஜாலியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் ஊழியர்கள். 

தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் சாஃப்ட்வேர் நிறுவனம் – Ideas2IT. ஃபேஸ்புக், புளூம்பெர்க், மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், மோட்டோரோலா, மெட்ரானிக் போன்ற பெரிய ஜாம்பவான்களுக்கு மென்பொருள் திட்டங்களை வழங்குவதுதான் Ideas2IT. இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் முரளி விவேகானந்தன் மற்றும் அவரின் மனைவி பவானிராமன். இவர்களின் மகள் காயத்ரி விவேகானந்தன். இவர்தான் இந்த நிறுவனத்தின் CEO. காயத்ரி. ‘‘நான் யாரையும் தொழிலாளர்களாகப் பார்த்ததில்லை’’ என்று பெயருக்கு ஏற்றபடியே சமத்துவத்தோடும், தெளிவோடும் பேசுகிறார் காயத்ரி விவேகானந்தன். 

பொதுவாக, சில நிறுவனங்கள் என்ன செய்யும்? Man of the Month, Staff of the Year என்று சில விருதுகளை வழங்கிக் கெளரவித்து ஏதாவது பொன்முடியோ, பரிசுகளோ வழங்குவது வழக்கம். ஆனால், இந்த நிறுவனத்தில் ஒவ்வோர் ஆண்டும் கார்களையும், பங்குகளையும் பரிசாக வழங்கிக் கெளரவிப்பது நெகிழ்ச்சியான விஷயம். 

கார்கள் ஓகே; அதென்ன பங்குகள்? ஆம், இங்கே (ஊழியர்களை உரிமையாக்கும் திட்டம்’ (Employee Ownership Program) என்கிற ஒரு திட்டத்தின் கீழ், அங்கு திறம்படப் பணிபுரியும் சீனியர் ஊழியர்களுக்கு, தங்கள் கம்பெனியின் ஒரு குறிப்பிட்ட சதவிகித பங்குகளையும் வழங்குகிறது Ideas2IT. இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள், 33% பங்குகளைப் பெறுவார்கள். இதில் 5% பங்குகள், இந்நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து பணியாற்றி வரும் 40 ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறதாம். 

இந்த ஆண்டு, இந்த நிறுவனத்தின் வெற்றிக்குப் பங்களித்தததில் முக்கியமான 50 பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாருதி கார்களையும் வழங்கியிருக்கிறது Ideas2IT. இதில் ‘எந்தெந்த கார் வேண்டும்’ என்று ஊழியர்களே அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். போன மாதம் இப்படித்தான் 5 ஆண்டு காலம் பணிபுரிந்த 100 சிறந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பரிசாகக் கார்களை வழங்கியிருந்தார்கள். இப்போது 50 பேருக்கு கார்கள். இந்த ஆண்டு மாருதி சுஸூகியின் ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, பெலினோ, இக்னிஸ் என்று எல்லா கார்களும் பரிசாகப் போயிருந்தன. 

குறைவான சம்பளத்தில் பணிக்குச் சேர்ந்த பல ஊழியர்கள், சீனியர் லீடர்களாகி இன்று கார் ஓனர்களாகி இருக்கிறார்கள்.

ஐஐடி போன்ற உயர்மட்டப் பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்களாக இல்லாமல், சாதாரண கல்லூரிகளில் படித்தவர்களுக்குத்தான் இங்கே பணியில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறதாம். ‘இன்ஜீனியரிங் படிச்சு என்னாத்த செய்ய’ என்று மீம் போடும் இன்ஜீனியர்கள் கவனிக்க!

இனி வரும் காலங்களில் சிறப்பாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு கார்கள், பங்குகள் தவிர நிலங்கள் தரவும் ஐடியா இருப்பதாகச் சொல்கிறார் முரளி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.