இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார்…!! விருப்பம் வெளியிட்ட மந்திரிகள்

பாட்னா,

நாட்டில், நடப்பு ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றன. வேட்பாளர் தேர்வு, பிரசார யுக்திகள் உள்ளிட்டவை பற்றிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. ஆளும் பா.ஜ.க.வானது தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. இதற்காக பிரதமராக உள்ள மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே காணப்படுகிறது. இந்நிலையில், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த மந்திரிகள் பலர், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை அறிவிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி பீகார் சமூகநல துறை மந்திரி மதன் சாஹ்னி மற்றும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கான நல துறை மந்திரி ரத்னேஷ் சடா உள்ளிட்டோர் நிருபர்களிடம் இன்று பேசும்போது, முதல்-மந்திரி நிதிஷ் குமார், பரந்த அனுபவம் நிறைந்த, சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த தலைவர் ஆவார்.

அவர், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர் என்பது பரவலாக ஏற்று கொள்ளப்பட்ட உண்மையாகும். முதல்-மந்திரி ஒருவரை, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ஆக்கலாம் என்றால், பின்னர் எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவரை அறிவிப்பதில் என்ன கடினம் இருக்க முடியும் என அவர்கள் இருவரும் கூறினர்.

எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவரை அறிவிப்பதனால், அடுத்த மக்களவை தேர்தலில் அதிகாரத்தில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவது என்பது எளிமையாக இருக்கும் என்றும் கூறினர். எதிர்க்கட்சிகள் மற்றும் நாட்டின் நலனிற்காக இதனை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் வருவதற்கான சாத்தியங்கள் பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர். எனினும், பிரதமர் வேட்பாளராக நிதிஷை அறிவிப்பது தன்னுடைய கோரிக்கை அல்ல என்றும் அது ஓர் ஆலோசனையே என்று சடா கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, முதல்-மந்திரி பிற்படுத்தப்பட்ட சமூக நபர் என்பதனால், சமூகத்தில் சில அந்தஸ்து படைத்த நபர்கள் அவரை அடுத்த பிரதமராக பார்க்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

இதேபோன்று சாஹ்னி கூறும்போது, தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைகள் பல்வேறு மட்டங்களில் முன்னேற்றம் கண்டு வருகின்றன என கூறியதுடன், தொகுதி பங்கீடு பற்றிய முடிவில் காலதாமதம் ஏற்படுகிறது என்ற உண்மையையும் ஒப்பு கொண்டார். தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்கப்பட்டதும், ஊடகத்தினருக்கு அதுபற்றிய தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.