கால நிலைமாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சவால்களுக்கு ஈடு கொடுத்துத் தாக்குப் பிடிக்கும் வகையில் சமூக பொருளாதார உணவு உற்பத்தித் திட்டம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் வாகரை, வெருகல், சேருவில, மூதூர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அந்தந்தப் பிரதேச செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் (01) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் 20ஆயிரம் மரங்களை நடும் இத்திட்டத்தின் கீழ் காலநிலை மாற்ற சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தென்னை, தேக்கு, இலுப்பை உள்ளிட்ட நீண்ட காலப் பயன்தரும் பல் வகை மரங்களும் மா, பலா உள்ளிட்ட கனி வர்க்க மரங்களும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இத்திட்டம் சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் அமுலாகிறது. சமூக, பொருளாதார, அபிவிருத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை விருத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், புத்தாண்டின் துவக்கத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவுற்பத்திப் பொருளாதார சமூக கூட்டுறவு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 200 பயனாளிக் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் சுமார் 13 இலட்ச ரூபாய் செலவில் பயனாளிகளுக்கு பல்வகை உணவு உற்பத்திக்கான உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளில் வாகரைப் பிரதேச செயலாளர் ஜி. அருணன், வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர். ஜயரட்ண, மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் உள்ளிட்டோரும் உதவிப் பிரதேச செயலாளர்களும் நிருவாக அதிகாரிகளும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
உணவுப் பஞ்சத்தையும் நஞ்சுள்ள உணவுகளையும் தவிர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் விவசாயிகளுக்கு தலா 1500 ரூபாய் பெறுமதியான கத்தரி, கறிமிளகாய், கீரை, தக்காளி, பீர்க்கு, சிறகவரை, பாகல், பயற்றை, வெண்டி உள்ளிட்ட பாரம்பரிய உள்ளுர் பயிர் விதைகளும் ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கூட்டுறவுச் சங்கங்களுக்காக 4000 விதைத் தேங்காய்கள் நாற்றிடப்பட்டு வாகரைப் பிரதேசத்துக்கான பாரம்பரிய விதை வங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு விதைத் தேங்காய்கள், தென்னங்கன்றுகள், பயிர் விதைகள் ஆகியவையும் ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிராம மட்டக் கூட்டுறவுச் சங்கங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிலைபேறான அபிவிருத்தியை அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் கிராமங்களில் பல பேருக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்களும் வருமானமும் ஈட்டக் கூடியதாகவுள்ளது.
அத்துடன் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் தென்னை உட்பட நீண்டகால பயன் தரும் பழ மரங்கள், உப உணவுப் பயிர்கள் விநியோகம் ஆகிய திட்டங்கள் இயற்கைச் சூழலைப் பேணுவதற்கும் மக்கள் போஷணைச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக் கொள்ளல், பொருளாதாரத்தை ஈட்டுதல், உணவுப் பஞ்சத்தைக் குறைத்தல் நஞ்சுள்ள உணவுகளைத் தவிர்த்தல் என்பவற்றுக்கு உதவும்.” என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும், பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவி ஊக்கங்கள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் 14 மாவட்டங்களில் சமூக பொருளாதார அபிவிருத்திச் அமுல்படுத்தப்படுகின்றன. அந்நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு இளைஞர் அபிவிருத்தி அகம் 2012ஆம் ஆண்டு தொடக்கம் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.