புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கியது. கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு யோகா திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:
யோகா கலையை பற்றி உலகம் அறிவதற்கு முன்பே புதுச்சேரியில் 29 ஆண்டு காலமாக யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எனது பாராட்டை தெரிவிக்கிறேன். யோகா என்பது மனதும், உடம்பும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது. உடல்நலமும், மனநலமும் நன்றாக இருக்க வேண்டும். யோகா செய்பவர்கள் நன்றாக படிக்கலாம். விரைவில் மனப்பாடம் செய்துவிட முடியும். நிறைய மதிப்பெண் வாங்கலாம். யோகா செய்யும்போது மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மூளையில் உள்ள செல்கள் உற்சாகமாக இருக்கும். அதனால் குழந்தைகள் யோகா செய்வது மிகமிக முக்கியம்.
யோகா உடல் நலத்தையும் பேணுகிறது. நான் ஒரு ஆங்கில மருத்துவர். ஆனால், எனக்கு இயற்கை மருத்துவத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஏனென்றால் இயற்கை மருத்துவமும், ஆங்கில மருத்துவமும் இணைந்து நல்ல ஆரோக்கியமான மருத்துவத்தை கொடுக்க முடியும்.
யோகா தினமும் செய்தால் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு யோகா என்பது நமது உடலையும், மனதையும் மிகத்தெளிவாக எடுத்துச் செல்கிறது. நம்மை அமைதியாக வைக்கிறது. யோகா நமது வாழ்வியலோடு ஒன்றியது. அதனால் தான் பிரதமர் ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக கொண்டாடினார். முன்பெல்லாம் இந்தியாவில் மட்டும் தான் யோகா கலை செய்தார்கள். ஆனால் இன்று உலகம் முழுவதும் யோகா செய்கின்றனர்.
நம் நாட்டில் செய்த யோகா கலையை இன்று உலகம் முழுவதும் செய்கிறார்கள் என்றால் அதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும். உலகத்துக்கு ஒரு கலையை இந்தியா கொடுத்திருக்கிறது. சிவன், அம்மன், ஐய்யப்பன், பிள்ளையார் என அனைத்து கடவுள்களும் யோகா நிலையில் தான் அமர்ந்திருக்கின்றனர். ஆகவே யோகா என்றால் இறைவன் என்பதை நமக்கு ஒன்றாக காண்பித்திருக்கின்றனர்.
இதற்கு முன்பு நடிகர்கள், செல்வந்தர்கள், பிரபலமானவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நானம்மாள் என்ற யோகா பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பது என்பது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வந்த பிறகுதான் நடந்திருக்கிறது. ஆகவே அனைவருமே ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகா செய்ய வேணடும் என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், வாழ்க்கையை சீராக அமைப்பதற்கு நல்ல நூல்களை படிப்பது அவசியமான ஒன்று. புதுச்சேரியை பொருத்தவரையில் யோகா கலை குறித்து அரவிந்தர் நமக்கு எழுதி கொடுத்துள்ளார். சித்தர்கள் எப்போதும் யோக நிலையில் தான் இருப்பார்கள்.
நமது வாழ்க்கைக்கும், பல ஆண்டுகள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் யோகா கலை மிக முக்கியமான ஒன்று. உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளையும் நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப யோகா கலை மூலம் தான் கொண்டு வர முடியும். அப்படிப்பட்ட யோகா கலையை நாம் ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடுகின்றோம்.
புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி பெற்றவர்கள், அங்கு வரும் நேயாளிகளுக்கு ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகா கலையை கற்றுக் கொடுக்கின்றனர். அதேபோன்று பள்ளிகளிலும் யோகா ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கின்றோம்.
புதுச்சேரியில் பிள்ளைகள், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதற்காக பல நிலைகளில் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகின்றோம். ஆகவே பிள்ளைகள் இதில் அதிக ஈடுபாடு கொண்டு யோகா கலையை கற்று உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏ ஜான்குமார், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன், இயக்குநர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக 600 மாணவர்கள் பங்கேற்ற பெருந்திரள் யோகா செயல் விளக்கம் நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த யோகா திருவிழா வருகின்ற 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.