பாங்காக் :மியான்மரில் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 10,000 கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி அந்நாட்டு ராணுவ அரசு விடுவித்தது.
நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கும், ராணுவ ஆட்சியை எதிர்க்கும் குழுக்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
குறிப்பாக, இந்தியா — மியான்மர் சர்வதேச எல்லையோர பகுதிகளில், ராணுவத்தினருக்கும், ஆயுதமேந்திய கும்பலுக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது.
இதனால், அங்கிருந்து தப்பி நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பலர் அகதிகளாக வருகின்றனர். மேலும் பலர் மியான்மர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மியான்மரின் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறைகளில் இருந்த கைதிகளில் 10,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக, மியான்மர் ராணுவ ஆட்சியின் தலைவர் மின் ஆங் ஹிலய்ங் அறிவித்துள்ளார்.
இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த 114 பேரும் அடங்குவர். அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதும் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
மன்னிப்பு வழங்கப்பட்ட 10,000 கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படாததால், ஏராளமான கைதிகளின் உறவினர்கள் சிறை முன் திரண்டனர்.
ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சாங் சூகி, 78, விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் மியான்மரில் எழுந்துள்ளது.
சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் நம் நாட்டிற்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதால், எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்