“இந்தியா நிச்சயமாக ஒரு சர்வதேச சக்திதான்” – சிலாகிக்கும் சீன அரசு ஊடகக் கட்டுரை

பீஜிங்: சீன அரசாங்கத்தின் முக்கியமான செய்தி ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் ”இந்தியா தன்னை உலகின் ஆளுமை சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள எடுக்கும் ஆக்கபூர்வ நடவடிக்கைகள், அதன் செயல்பாட்டு உத்தி ஆகியன போற்றத்தக்கது. இந்தியா நிச்சயமாக ஒரு சர்வதேச சக்திதான்” என்று சிலாகித்து எழுதப்பட்டுள்ளது.

ஃபூடான் பல்கலைக்கழத்தின் தெற்காசிய படிப்புகளுக்கான மையத்தின் இயக்குநரான ஜாங் ஜிடோங், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா செய்துள்ள அளப்பரிய சாதனைகளை விவரித்து ஜனவரி 2 வெளியான பதிப்பில் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, நகர்ப்புற மேலாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், சர்வதேச உறவுகளில் இந்தியாவின் கொள்கையில் மேற்கொள்ளபட்டுள்ள சீர்திருத்தங்கள் குறிப்பாக சீனவுக்கான வெளியுறவுக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியன பற்றி பாராட்டி எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையின் ஒரு பத்தியில், “இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் முன்னேறி வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. சமூகநல மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது.” எனக் கட்டுரையாளர் ஜாங் ஜிடோங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அக்கட்டுரையில், “சீனா – இந்தியா இடையேயான வர்த்தக ஏற்றத்தாழ்வு பற்றி பேசுவோமேயானால், முன்பெல்லாம் இந்தியப் பிரதிநிதிகள் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான சீனாவின் நடவடிக்கைகளை எதிர்நோக்கி இருந்தனர். ஆனால் இப்போது இந்தியா தனது ஏற்றுமதி திறனை வளர்த்துள்ளது.

அரசியல், கலாச்சார வட்டங்களிலும், இந்தியா தனது ஜனநாயகக் கொள்கையிலும் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. மேற்குலகுடன் ஒருமித்த ஜனநாயகக் கொள்கை என்ற நிலையில் இருந்து ‘ஜனநாயக அரசியலில் இந்திய அம்சம்’ என்ற பாதையை வகுத்துள்ளது. இப்போது ’ஜனநாயக அரசியலில் இந்தியாவின் வேர்கள்’ இன்னும் அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது. காலனி ஆதிக்க வரலாற்று அடையாளங்களில் இருந்து விடுபட இந்தியா எடுக்கும் முன்னெடுப்புகள் உலகுக்கு ஓர் வழிகாட்டி. அரசியல் ரீதியாக மட்டுமல்ல கலாச்சார ரீதியாகவும்.

ரஷ்யா – உக்ரைன் போருக்கு மத்தியிலும் இந்தியா உலக அரங்கில் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யாவுடன் கொண்டிருந்த தொடர்பு பாராட்டப்பட்டுக்குரியது. இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்தே, அவர் பல்தரப்பு ஒத்துழைப்பு உத்தியையே கையாண்டு வருகிறார்.இதுவே அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவை வளர்த்துள்ளது.

இந்தியா எப்போதுமே தன்னை ஒரு சர்வதேச அரங்கில் முக்கிய சக்தியாகவே கருதியுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்தியா பலதரப்பு சமரச நிலையில் இருந்து பலதரப்பு ஒத்துழைப்பு நிலைக்கு முன்னேறியுள்ளது. அதனால் பல்துருவ உலகில் இந்தியா தற்போது முக்கியமான சக்தியாக உருமாறிவருகிறது. இதுபோன்ற அசுர வளர்ச்சி சர்தவேத தொடர்புகளில் காணப்படுவது மிகவும் அரிது. இந்தியா உலக அரங்கில் நிச்சயமாக ஒரு பெரும் சக்தி. வலிமையான, தீர்க்கமான இந்தியாவாக சர்வதேச அரசியலில் முக்கிய இடத்தை அது பிடித்துள்ளது. இதனை நிறைய நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். சீன அரசு ஊடகத்தில் வெளியான இந்தக் கட்டுரை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.