ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் `மெரி கிறிஸ்துமஸ்’.
இந்தி, தமிழ் என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று மும்பையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் சேதுபதி கத்ரீனாவைப் புகழ்ந்து பேசி வெட்கப்பட வைத்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கத்ரீனா குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, “கத்ரீனா கைஃப் உடன் பணிபுரிவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவரின் தீவிர ரசிகை நான். அவர் அழகானவர் மட்டுமல்ல. சிந்தனைமிக்க நடிகையும் கூட! நல்ல கதைகளைத் தேர்வு செய்து வருகிறார். அவருடைய சிந்தனை, திறமை, ஆற்றல்தான் இத்தனை ஆண்டுகளாக அவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறது. ஒரு காட்சி சிறப்பாக வர வேண்டும் என்றால் அதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுப்பார். மிகவும் அர்ப்பணிப்பு உடையவர்!” என்றார்.

விஜய் சேதுபதி தொடர்ந்து கத்ரீனாவைப் புகழ்ந்து பேச, கத்ரீனா சிரித்துக்கொண்டே வெட்கப்பட்டிருக்கிறார். அதற்கு உடனே விஜய் சேதுபதி, “நான் ஜோக் அடிக்கல, சீரியஸாகத்தான் சொல்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது லைக்குகளை அள்ளி வருகிறது.