மகாராஷ்டிராவில் டிஜிபியாக இருந்த ராஜ்னிஷ் சேத் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு மாநில அரசு பதவி நீட்டிப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக அவரை மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக நியமித்துள்ளது. புதிய டிஜிபியாக ரேஷ்மி சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். ரேஷ்மி சுக்லா இதற்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் டிஜிபியாக இருந்தார். அதோடு இதற்கு முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் உத்தவ் தாக்கரே ஆட்சியில் ரேஷ்மி சுக்லா மகாராஷ்டிரா உளவுப்பிரிவில் பணியாற்றினார். அப்போது சந்தேகத்திற்கு இடமான போன்களை ஒட்டுக்கேட்கும் முக்கியமான இடத்தில் அவர் பணியில் இருந்தார்.

பட்னாவிஸ் பதவி முடிந்து உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்தராரர்களின் போன் கால்களை அரசுக்கு தெரியாமல் 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத், ஏக்நாத் கட்சே, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஆகியோரது போனை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு போலீஸ் அதிகாரிகள் இடமாறுதல் கேட்டு இடைத்தரகர்கள் மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போன் செய்ததையும் பதிவு செய்தார் என்றும், அந்த போன் உரையாடல்களை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸிடம் கொடுத்தார் என்றும் செய்திகள் வெளியானது.
அந்த ஆடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு உத்தவ் தாக்கரே அரசுக்கு பட்னாவிஸ் நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து ரேஷ்மி சுக்லா மீது புனே மற்றும் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் இவ்வழக்குகளில் கைது செய்யப்படக்கூடும் என்று கருதி உடனே ரேஷ்மி மத்திய பணிக்கு சென்றுவிட்டார். ஆனாலும் ஐதராபாத்தில் பணியில் இருந்த போது அங்கு சென்று போலீஸார் வாக்குமூலம் வாங்கி வந்தனர். ரேஷ்மி சுக்லா ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்டதற்கு சன்மானமாக இப்போது மாநில அரசு டிஜிபி பதவி கொடுத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து ஏக்நாத் ஷிண்டே அரசு பதவிக்கு வந்தவுடன் சுக்லா மீதான இரண்டு வழக்குகளை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ரேஷ்மி இப்பதவியில் வரும் ஜூன் மாதம் வரை மட்டுமே நீடிப்பார். ஜூன் மாதம் அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதேசமயம் ஜூன் மாதத்திற்குள் மக்களவைக்கு தேர்தல் நடந்துவிடும். தேர்தல் நேரத்தில் சுக்லாவின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து ரேஷ்மி சுக்லாவை வெறும் 6 மாதத்திற்கு டிஜிபியாக மாநில அரசு நியமித்து இருப்பதாக எதிர்தரப்பினர் குற்றச்சாட்டை கிளப்பி வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.