புதுடெல்லி: கிருஷ்ணஜென்ம பூமி வழக்கில், ஷாயி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும், அந்த இடம் கிருஷ்ணஜென்ம பூமியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று அறிவிக்க வேண்டும், மசூதியை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் மஹெக் மஹேஷ்வரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது. அந்த அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், “கிருஷ்ணஜென்ம பூமிக்கு உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு உரிமையியல் வழக்குகள் தற்போது நிலுவையில் இருக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தில் மேலும் பல வழக்குகள் வேண்டாம். மனுதாரர் பொது நல வழக்காக தாக்கல் செய்துள்ளார். எனவேதான், இந்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பொதுநல வழக்காக அல்லாமல் வேறு முறையில் தாக்கல் செய்தால் நாங்கள் அதனை விசாரிக்கிறோம்” என தெரிவித்தது.
முன்னதாக, இந்த பொதுநல மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அதனை கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.