காரைக்கால்: புதுச்சேரி அரசால் காரைக்கால் பிராந்தியம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான காலண்டரில்கூட இது வெளிப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 4 பிராந்தியங்களில் புதுச்சேரிக்கு அடுத்த நிலையில் பரப்பளவிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் 5 சட்டப்பேரவை தொகுதிகளுடன் பெரிய பிராந்தியமாக காரைக்கால் உள்ளது.
ஆனால், புதுச்சேரியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து காரைக்கால் வளர்ச்சியை புறக்கணித்து வருவதுடன், அலட்சியப் படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான மாத காலண்டரை அண்மையில் முதல்வர் என்.ரங்கசாமி வெளியிட்டார். ஆனால், அந்த காலண்டரில் காரைக்காலை அடையாளப்படுத்தும் படங்கள் இடம்பெறவில்லை. மேலும், வழக்கத்துக்கு மாறாக 6 மாதங்களுக்கான பக்கங்களில் அரசு நிகழ்ச்சிகளின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதிலும் காரைக்கால் இடம்பெறவில்லை.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான காலண்டரில்கூட காரைக்கால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் காலண்டரில் புதுச்சேரியின் 4 பிராந்தியங்களையும் அடையாளப்படுத்தும் வகையில் கலைச் சின்னங்கள், ஆன்மிக மற்றும் கலை விழாக்கள், புராதனக் கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், இயற்கை எழில் சார்ந்த அழகான புகைப்படங்கள் மட்டுமே ஒவ்வொரு மாத பக்கத்திலும் இடம்பெறுவது வழக்கம்.
ஆனால், நிகழாண்டு வெளியிடப்பட்ட காலண்டரில் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் சார்ந்த படங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. இது வழக்கத்துக்கு மாறான தேவையற்ற ஒன்று. காரைக்காலைச் சார்ந்த புகைப்படங்கள் இடம்பெறாததுடன், வேறு இடத்தில் நடந்த விழாவை காரைக்காலில் நடந்த விழாவாக குறிப்பிட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்றார்.
இதுகுறித்து காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரிய முன்னாள் நிர்வாகி டி.ரஞ்சன் கார்த்திகேயன் கூறியது: நிகழாண்டு அரசு வெளியிட்டுள்ள மாத காலண்டரில் ஜூன் மாதத்துக்கான பக்கத்தில், காரைக்கால் மாங்கனித் திருவிழா என்ற அடிக்குறிப்புடன் ஒரு புகைப்படம் பெரிய அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் அது காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவே அல்ல. வேறு ஒரு படத்தை போட்டு, அந்நிகழ்வையே சிறுமைப்படுத்தும் வகையில் செய்துவிட்டனர். இது முழுக்க முழுக்க அரசு அதிகாரிகளின் காரைக்கால் மீதான அலட்சியத்தையே காட்டுகிறது என்றார்.
2024-ம் ஆண்டுக்கான காலண்டரில் காரைக்கால் மாங்கனித் திருவிழா என்ற அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள படம், புதுச்சேரி நகரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் நடத்தப்படும் மாங்கனித் திருவிழா காட்சியின் படம் என தெரியவந்துள்ளது.