ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டி ஊராட்சியில் குடிநீர் கலங்கலாகி துர்நாற்றம் வீசுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கமலாகுளம் கண்மாயின் உட்பகுதியில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைத்து கோட்டைப்பட்டி ஊராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட தெற்குத் தெரு கண்ணன் காலனி ஆகிய பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக கமலாகுளம் கண்மாய் முழுவதும் நிரம்பி ஆழ்துளை கிணறுகளை மூழ்கடித்து விட்டது. வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படும் குடிநீர் கலங்கலாகி துர் நாற்றம் எழுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் 20 நாட்களாக பொது மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கோட்டைபட்டி தெற்கு தெருவில் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.