பழநி: மலை அடிவாரம், கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்… வேதனை தெரிவித்த வியாபாரிகள்!

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக பழநி திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இத்திருவிழா காலங்களில் முருகனை தரிசனம் செய்ய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள்.

அப்போது கோயிலில் அதிகப்படியான கூட்டம் நிரம்பி வழியும். மக்கள் பாதையாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடியெடுத்தும், அடிவாரத்தை வலம் வந்து மடிப்பிச்சை எடுத்தும் முருகனுக்கு நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நேரங்களில் கூட்டநெரிசல் ஏற்பட்டு, பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்ய இடையூறு ஏற்படுவதாகவும், மலை அடிவாரத்தில் கிரிவலம் வரும் பாதைகளில் அதிகபடியான ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை போட்டு பக்தர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறார்கள் எனவும் ராதாகிருஷ்ணன் என்ற பக்தர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அவ்வழக்கில் அவர், `முருகன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற புகழ்மிக்க கோயில் பழனி. விழா காலங்களில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்கும் முருகப்பெருமானினை தரிசனம் செய்வதற்கும் இடைஞ்சலாக சாலையோர வியாபாரிகள் அடிவாரத்தின் இரு பகுதிகளையும் ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக தள்ளு வண்டியில் உணவுகள், பல்பொருள் அங்காடிகள், பொம்மை கடைகள் என ஆக்கிரமிப்பு செய்துள்ளது, கூட்ட நெரிசலை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கிறது’ என தெரிவித்தார்.

பழனி நகராட்சி சார்பில் அளிக்கப்பட விளக்கம்..!

நகராட்சி தரப்பிலும், அறநிலையத்துறை தரப்பிலும் பலமுறை நடைபாதை வியாபாரிகளுக்கு ஒலிபெருக்கி மூலமாக தெரிவித்தும், ஆக்கிரமிப்பு கடைகளை எடுக்க வலியுறுத்தியும் அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

பின்னர் பலமுறை ஆக்கிரமிப்பு கடைகள் அறநிலையத்துறை மூலம் அகற்றம் செய்யப்பட்டது. அகற்றம் செய்யப்பட்ட மறுநாள் அதே இடத்தில் வியாபாரிகள் மீண்டும் கடை போட ஆரம்பித்தனர் என்ற புகார் எழுந்தது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் பலர் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை வரன்முறை செய்யமுடியவில்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த 03.01.2024 அன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், பழநி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கிரிவலப் பாதையில் இனி தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றும், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் தென்பட்டால் அதனை தங்கு தடை இன்றி உடனே அகற்ற வேண்டும் என்றும் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை செயல்படுத்தும் பொருட்டு பழநி முருகன் கோயில் அடிவாரம், கிரிவலப் பாதை என பக்தர்களுக்கு இடையூறாக உள்ள பகுதிகள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளையும், கடைகளையும் பழநி தேவஸ்தானம் மற்றும் நகராட்சி நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று (06.01.2024) ஜேசிபி மூலம் அகற்றினர்.

அதன் பின்னர் பழநி தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த அறநிலையத்துறையின் இடத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவோடு ரூபாய் 5 கோடி மதிப்பிலான திருக்கோவிலின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும், இன்று ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்ட முக்கியமான இடங்களில் பக்தர்கள் எளிதில் பஞ்சாமிர்தம் பெற்று செல்லும் வகையில் விற்பனை மையங்கள் தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மலைக்கோயில் மற்றும் கிரி வீதியில் மொத்தமாக சுமார் 20 இடங்களில் பக்தர்கள் பஞ்சாமிர்தம் பெற்று செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பஞ்சாமிர்தம் விற்பனை கடந்த ஆண்டு இதே தேதியில் (5.1.23) 25 கோடியாக இருந்த விற்பனை இந்த ஆண்டு இதே தேதியில் (5.1.24) 29 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் வரும் காலங்களில் இதனை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏதுவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில், “எங்களின் வாழ்வாதாரமே இந்த மலையும், அந்த முருகனும் தான். நாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி அதை முதலீடு செய்து தொழிலை நடத்தி வருகிறோம். இப்படி வியாபாரம் சிறப்பாக நடக்கின்ற சீசன் நேரத்தில் கடைகளை அகற்றி, எங்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் நாங்கள் வாழ்வாதாரத்திற்காக எங்கே செல்வது.

ஒரு ஆண்டிற்கு குறிப்பாக (கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி) வெறும் ஐந்து மாதங்கள் மட்டுமே எங்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்த சீசன் நேரங்களில் தான் வியாபாரம் படு ஜோராக நடக்கும். அப்படி வருமானம் வரும் நேரத்தில் ஜேசிபி மூலம் கடைகளை அகற்றி எங்களை இவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகி இருக்கின்றனர்.

எங்களுக்கு கடை போடுவதற்கு மாற்று இடம் என்று எதனையும் தேவஸ்தானம் சார்பில் வழங்கவில்லை. இங்கு கடை நடத்தி அதில் இருந்து வரும் வருமானத்தினால் மட்டுமே பல குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்று அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது. எங்களுக்கு ஏதேனும் மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும்” என்று வியாபாரிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.