மதுரை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி மதுரையில் இன்று நடந்த அமைதிப் பேரணியில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்த் டிச.28-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி இன்று மதுரை தேமுதிக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் அமைதிப் பேரணி நடைபெறறது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே யூ.சி.பள்ளியிலிருந்து மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி வரை அமைதிப் பேரணியாக சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு அனைத்து கட்சியினரும் மலரஞ்சலி செலுத்தினர்.

இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, விசிக, தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் , கம்யூனிஸ்ட் கட்சி, மருது சேனை அமைப்பு, வணிகர்கர்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். இந்த பேரணிக்கு தேமுதிக மாநகர தெற்கு மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கணபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இப்பேரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் எம்எல்ஏ, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி.நாகராஜ், தேமுதிக உயர்மட்டக்குழு உறுப்பினர் பாலன், விசாரணைக்குழு உறுப்பினர் அழகர்சாமி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், மருது சேனை தலைவர் ஆதிநாராயணன், ஓபிஎஸ் அணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்துக்கட்சியினர் பங்கேற்றனர்.