உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்திலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த சம்பர்க் கிராந்தி விரைவு ரயிலில் பயணம் செய்த இருவர், குளிரைத் தணிக்க ரயிலுக்குள் நெருப்பைப் பற்றவைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து அலிகர் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரி அளித்த தகவலின்படி, கடந்த 3-ம் தேதி இரவு, பர்ஹான் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ரயில்வே கிராசிங்கில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது, கேட்மேன் ரயில் பெட்டிக்குள்ளிருந்து வெளிச்சம் மற்றும் புகையைக் கண்டுள்ளார். அப்போது அவர் ரயிலில் தீ பற்றியதாகக் கருதி, உடனடியாக பர்ஹான் ரயில் நிலையத்தில் உள்ள தனது உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.

அதன் பிறகு ஒரு ஆர்.பி.எஃப் குழு ரயிலை அடுத்த ஸ்டேஷனான சாம்ரௌலாவில் நிறுத்த ஏற்பாடு செய்தது. பிறகு ரயிலுக்குள் சென்று பார்த்தபோது, ஓடும் ரயிலின் ஏற்பட்ட கடும் குளிரைத் தணிக்க, சில பயணிகள் சணல் பைகளைக் கொளுத்தி நெருப்புப் பற்றவைத்திருப்பதைக் கண்டறிந்தனர். அதே நேரத்தில் பெரிய சேதம் ஏதேனும் நிகழும் முன்பு தீ அணைக்கப்பட்டது. பின்னர் ரயிலை அலிகர் சந்திப்பிற்குக் கொண்டு சென்று, முதற்கட்டமாகச் சந்தேகத்தின் பேரில் 16 பேர் தடுத்துவைக்கப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இறுதியாக ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23), தேவேந்திரா (25) ஆகிய இரு இளைஞர்கள், தங்களுக்கு ஏற்பட்டக் கடும் குளிரைத் தணிக்க, நெருப்பைப் பற்றவைத்ததாக ஒப்புக்கொண்டனர். அவர்கள்மீது ஐ.பி.சி மற்றும் இந்திய ரயில்வே சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுடன் இணைந்த மற்ற 14 சக பயணிகளும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாக அலிகர் ரயில் நிலையத்தின் (RPF) கமாண்டன்ட், ராஜீவ் வர்மா தெரிவித்தார்.