பெங்களூரு: கர்நாடகாவில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்கு 200 பேருக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலை புதிதாக 297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,136 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,070 பேர் தங்களின் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா பரவலை தடுப்பது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், கரோனா தடுப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்துக்கு பின்னர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது: “கர்நாடகாவில் தினமும் 7 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா பரவலின் வேகம் குறைந்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் இன்னும் பரவல் வேகம் குறையவில்லை. எனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, கண்காணிப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சளி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை போன்ற அறிகுறி உள்ளவர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்த வாரத்தில் இருந்து கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும்” என்று தெரிவித்தார்.