புதுடெல்லி: காங்கிரஸ் தேசிய மகளிர் பிரிவு தலைவராக நெட்டா டிசோசா பதவி வகித்தார். அவருக்கு பதிலாக டெல்லி முன்னாள் எம்எல்ஏ அல்கா லம்பாவை காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் நியமித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரான அல்கா லம்பா, கடந்த 2014-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2015-ல் டெல்லி, சாந்தினி சவுக் தொகுதி எம்எல்ஏ ஆனார். மீண்டும் 2019-ல் இவர் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வருண் சவுத்ரியை, காங்கிரஸ் மாணவர் அணித் தலைவராக அக்கட்சி நியமித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்ய 5 தேர்வுக் குழுக்களை கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்படுத்தியுள்ளார்.