மது பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம். சாராயம் வாங்கப் பணம் இல்லாமல் கடன் வாங்குவது, திருடுவது போன்ற காரியங்களிலும் சிலர் ஈடுபடுவதுண்டு. ஆனால், மகாராஷ்டிராவில் ஒருவர் சாராயம் வாங்கப் பணம் இல்லாமல், தனது சொந்த மகனையே பணத்துக்காக விற்பனை செய்துவிட்டார். மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள கோபர் என்ற இடத்தை சேர்ந்தவர் தாதர்ராவ். குடிப்பழக்கத்திற்கு அடிமையான தாதர் ராவ், அடிக்கடி தனது மனைவியிடம் பணம் வாங்கி மது அருந்தி வந்தார். ஆனால் அவரது மனைவியும் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் சாராயம் வாங்கப் பணம் இல்லாமல் திண்டாடினார்.

உடனே தனது 3 வயது மகனை அதே ஊரை சேர்ந்த சந்திராபென் என்பவர் துணையோடு அண்டை மாநிலமான தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டார். வீட்டில் மகனை காணாது தேடிப்பார்த்துவிட்டு, தாதர்ராவ் மனைவி இது குறித்து தனது கணவரிடம் கேட்டபோது, குழந்தையை விற்பனை செய்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு தெலங்கானாவின் மோகன்ராவ் பேட் பகுதியில் விற்பனை செய்யப்பட்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக குழந்தையின் தந்தை தாதர்ராவ், கைலாஷ் மற்றும் கோடம்பே ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

இது குறித்து யவத்மால் போலீஸ் கண்காணிப்பாளர் பன்சோட் கூறுகையில், “குழந்தையை அதன் தந்தை ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டார். மது பழக்கத்திற்கு அடிமையான குழந்தையின் தந்தை, மது வாங்குவதற்காக குழந்தையை அடிலாபாத்தை சேர்ந்த ஏஜென்ட் மூலம் விற்பனை செய்துள்ளார். குழந்தையை வாங்கிய நபர் கத்தாரை சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தார்” என்று தெரிவித்தார்.
நாட்டிலேயே அதிக அளவில் ஆட்கடத்தல் தெலங்கானாவில் நடைபெறுகிறது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் மகாராஷ்டிராவில் கடத்தப்பட்ட 793 பெண்களை போலீஸார் மீட்டுள்ளனர்.