சூர்யாவின் அடுத்தடுத்த லைன் அப்கள் வியக்க வைக்கிறது. ‘கங்குவா’ படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
அடுத்து சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ அதனை அடுத்து இந்திப் படம் என பிஸியாக இருக்கிறார் சூர்யா.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம், ‘கங்குவா’. இதில் நிகழ்கால போர்ஷனும், பீரியட் காலகட்டமும் இருக்கிறது. குறிப்பாக பீரியட் போர்ஷன் 70 சதவிகிதம் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த கதை இது. பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் தயாராகி வருகிறது. முன்னரே சொன்னபடி, ‘கங்குவா’ படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னரே நிறைவடைந்து விட்டாலும், அதன் பேட்ச் ஒர்க் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. அதில் சூர்யாவின் போர்ஷன் இன்னும் அரைநாள் எடுக்க வேண்டியிருக்கிறது என்பதால், வரும் வாரத்தில் அதில் பங்கேற்கிறார் சூர்யா.

‘கங்குவா’ படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், அதன் பேட்ச் ஒர்க் வேலைகள் சென்னையில் நடந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதமே, சூர்யாவின் போர்ஷன் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டது. அதன் நிறைவு நாள் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில், சூர்யாவிற்கும் லேசாக காயமானது நினைவிருக்கலாம். இப்போது வெளிநாட்டில் ஓய்வில் இருந்துவிட்டு அவர் வந்திருப்பதால், சூர்யாவின் பேட்ச் ஒர்க்கை வரும் வாரத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதில் படத்தின் வில்லனான பாபி தியோல் மோதும் காட்சிகளின் பேட்ச் ஒர்க் வேலைகள் நடக்கிறது. அடுத்த வாரத்தோடு ‘கங்குவா’வின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடுகிறது. அதனையடுத்து, முழுக்க முழுக்க கிராபிக்ஸ் வேலைகள் தொடங்குகிறது. எனவே படத்தை கோடை விடுமுறையில் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறார்கள். ‘கங்குவா’வை முடித்துக் கொடுத்துவிட்டதால், சூர்யா அடுத்து நடிக்கும் ‘புறநானூறு’ படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சூரரைப் போற்று’விற்குப் பிறகு ‘சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘புறநானூறு’. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய்வர்மா எனப் பலரும் நடிக்கிறார்கள். 1950-ம் ஆண்டிலிருந்து 1965-ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் என்பதால், இசையில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி. மதுரை ஏரியா தான் படத்தின் கதைக்களம் என்பதால், மதுரை மக்கள் பலரும் படத்தில் நடிக்கின்றனர். இதற்கான ஆடிஷன்கள் நடந்து முடிந்துவிட்டது. மதுரையின் பழைமையான கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடக்கிறது.
அனேகமாக ஜனவரி மாத கடைசியிலோ அல்லது அடுத்த மாத முதல் வாரத்திலோ ‘புறநானூறு’ படப்பிடிப்பு இருக்கும் என்றும் இந்த படத்திற்காக ஸ்லிம் சூர்யாவை பார்க்கலாம் என்றும் சொல்கிறார்கள்.