புதுடெல்லி: “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,002 ஆக அதிகரித்துள்ளது” என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஜன., 08) தெரிவித்துள்ளது.
குளிர்காலம் தொடங்கியவுடன், வைரஸ் தொற்றுகள், காய்ச்சல் மற்றும் கோவிட்-19 தொற்றுகள் திடீரென அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவுடன், அதன் பரவலைத் தடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேரும், கர்நாடகா மற்றும் திரிபுராவில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,002 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,396 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,44,81341 பேர் கரோனாவில் இருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போதைய ஆதாரங்களின் அடிப்படையில் ஜேஎன்.1 திரிபு வைரஸின் ஒட்டுமொத்த ஆபத்து குறைவாகவே உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.