எளிமையானவன் என்கிற முத்திரையை விரும்பவில்லை: விஜய்சேதுபதி வெளிப்படை பேச்சு

நடிகர் விஜய்சேதுபதியை பொருத்தவரை தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். கடந்த வருடம் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் மூலமாக பாலிவுட்டிலும் நுழைந்து விட்டார். தமிழில் அவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திரம், வில்லன் மற்றும் சில நிமிடங்களே வந்து செல்லும் சிறப்பு தோற்றம் என எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்ல பொதுவெளியில் வரும்போது ரசிகர்களிடம் எந்தவித பந்தாவும் இன்றி பேசி பழகுபவர் என்கிற பெயரும் பெற்றுள்ளார். இதனால் பெரும்பாலும் விஜய்சேதுபதி என்றாலே எளிமையானவர் என்கிற ஒரு தோற்றம் இயல்பாகவே உருவாகிவிட்டது. ஆனால் இந்த எளிமையானவன் என்கிற அடையாளத்தை நான் விரும்பவில்லை என்று தற்போது வெளிப்படையாகவே கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி நடிப்பில் ஹிந்தி மற்றும் தமிழில் உருவாகியுள்ள 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாகிறது. இந்த படத்தில் கத்ரீனா கைப் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தான் இப்படி பேசியுள்ளார் விஜய்சேதுபதி.

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “நான் பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அணியும் உடைகள் எல்லாம் எளிமையாக தோன்றினாலும் அனைத்துமே விலை உயர்ந்தவை தான். இன்று இந்த விழாவிற்கு அணிந்து வந்துள்ள உடை, எனக்கு அணிவதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காகத் தான் அணிந்திருக்கிறேனே தவிர எளிமையானது என்பதற்காக அல்ல. மக்கள் என்னை எளிமையாக இருக்கிறார் என்பது போல கருதுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இன்னும் சொல்லப்போனால் எளிமையானவன் என்கிற ஒரு அடையாளத்தையே நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார் விஜய்சேதுபதி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.