ஜன., 19ம் தேதி விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி : நடிகர் சங்கம் நடத்துகிறது

நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி காலமானார். அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தற்போது கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தினமும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்த இறந்த சமயம் நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் கடந்த சில தினங்களாக ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் விஜயகாந்திற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விஜயகாந்த் படத்திற்கு நடிகர், நடிகைள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு அவரது நினைவுகள் குறித்து பேசுகிறார்கள்.

இறுதியில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அரசுக்கு சில கோரிக்கைகள் வைக்கிறார்கள். மதுரையில் விஜயகாந்திற்கு சிலை, சென்னையில் உருவாகும் புதிய திரைப்பட நகருக்கு விஜயகாந்த் பெயர் என பல கோரிக்கை வைக்க இருக்கிறார்கள். இதற்கிடையில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கும் அறிவிப்பும் வெளியாகலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் “தன் புகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த, எங்கள் சங்கத்தின் தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம் 19.01.2024 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.