“பில்கிஸ் பானு போராட்டம்… பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி அடையாளம்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், “பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம், திமிர் பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றிக்கான அடையாளம்’ என ராகுல் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி, பவன் கேரா ஆகியோரும் பாஜகவை விமர்சித்திருக்கிறார்கள்.

பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், 11 பேர் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது. அதேநேரம், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் விசாரணைக்கு தகுதியானவை இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில், “பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம், திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றிக்கான அடையாளம். தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொல்லும் போக்கு என்பது ஜனநாயக அமைப்புக்கு மிகவும் ஆபத்தானது. இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குற்றவாளிகளின் காவலர் அல்லது ஆதரவாளர் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நாட்டுக்கு எடுத்துரைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியும் தனது எக்ஸ் தளத்தில், “இந்த உத்தரவின் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் பெண்களுக்கு எதிரான போக்கு வெளிப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். பில்கிஸ் பானு தனது போராட்டத்தைத் துணிச்சலுடன் தொடர வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் தளத்தில், “இந்த தீர்ப்பானது 11 குற்றவாளிகளையும் சட்டவிரோதமாக விடுவிக்க வழிவகுத்தவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியவர்களின் முகத்தில் அறையப்பட்ட ஓர் அறையாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது, இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கும், கவுரவிப்பதற்கும் வழிவகுத்த பாஜகவின் முகத்தில் அறையப்பட்ட அறை. அரசியல் அஜெண்டாக்களை விட நீதிதான் எப்போதும் வெல்லும்” எனத் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.