வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
102 ஆண்டுகளை கடந்த இன்சுலின் கண்டுபிடிப்பு – தேவையும் எதிர்காலமும் 1980 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டோரில் ஐந்து சதவீதம் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று, அந்த எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்பது சதவீதமாக அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளது. முதல் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் கட்டாயம் தேவைப்படுகிறது. உடல் பருமன், மோசமான உணவு மற்றும் உடல் செயலற்ற தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவைப்படலாம், ஆனால் அவசியமில்லை.

2018 ஆம் ஆண்டில் 40.6 கோடியாக இருந்த இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 20% உயர்ந்து 2030ஆம் ஆண்டில் 55.1 கோடியாக அதிகரிக்கும் என்றும் இவர்களில் பாதி பேர் சீனா (13 கோடி), இந்தியா (9.8 கோடி) மற்றும் அமெரிக்கா (3.2 கோடி) ஆகிய நாடுகளை சேர்ந்தவராக இருப்பார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன..
கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இந்திய மருத்துவர் சுஷ்ருதா நீரிழிவு நோயை கண்டறிந்து அதற்கு “மதுமேஹா” என்று பெயரிட்டார். “மது” என்ற சொல்லுக்கு தேன் என்றும் “மேஹா” என்ற சொல்லுக்கு சிறுநீர் என்றும் பொருள் கொண்ட இந்த சொற்கள் இணைக்கப்படும் போது மதுமேஹா “இனிப்பான சிறுநீர்” ஆகிறது. சுஸ்ருதா காலத்தில் ஆரம்பமான நீரழிவு நோயிற்கான ஆராய்ச்சிகள் 1889 ஆம் ஆண்டு நீரிழிவு நோயில் கணையத்தின் பங்கினை உறுதிசெய்த ஜோசப் வான் மெரிங் மற்றும் ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி ஆகியோரின் கண்டுபிடிப்பிலிருந்து வேகம் எடுக்க ஆரம்பித்தது. கணையம் அகற்றப்பட்ட நாய், நீரிழிவு நோயின் அனைத்து அறிகுறிகளுடனும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டதை கொண்டு நீரிழிவு நோயில் கணையத்தின் பங்கினை உறுதி செய்தனர்.
வான் மெரிங் மற்றும் மின்கோவ்ஸ்கியின் பணியினை தொடர்ந்த சர் ஃபிரடெரிக் கிரான்ட் பாண்டிங் மற்றும் சார்லஸ் ஹெர்பர்ட் பெஸ்ட் ஆகியோர் ஆரோக்கியமான நாய்களின் கணைய இயக்குநீரினை (கணையத்தின் லாங்கர்ஹான் சுரப்பியில் சுரக்கும் இயங்குநீர்) பாதிக்கப்பட்ட நாய்களுக்கு கொடுப்பதால் நீரிழிவு நோயை மாற்றியமைக்க முடியும் என்பதை 1921 ஆம் ஆண்டில் நிரூபித்தனர்.
பாண்டிங், பெஸ்ட் மற்றும் அவர்களது சக வேதியியலாளர் கோலிப் ஆகியோர் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பசுக்களின் கணையத்தில் இருந்து எடுத்த சுத்திகரிக்கப்பட்ட இன்சுலின் என்ற ஹார்மோன் 1922 ஆம் ஆண்டு முதல் நீரிழிவு நோய்க்கு பயனுள்ள சிகிச்சை கிடைக்க வழி வகுத்தது. இதற்காக, 1923ஆம் ஆண்டு பாண்டிங் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆய்வக இயக்குனர் மேக்லியோட் ஆகியோருக்கு உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது, இருவரும் தங்கள் பரிசுத் தொகையை தங்கள் அணியில் இருந்த மற்றவர்களுடன் (குறிப்பாக பெஸ்ட் மற்றும் கொலிப் ஆகியோருடன்) பகிர்ந்து கொண்டனர்.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளிகள் இன்சுலினை பெறுவதற்காக பாண்டிங் மற்றும் பெஸ்ட் அதன் காப்புரிமையை இலவசமாகக் கிடைக்கச் செய்தார்கள். 1922ஆம் வருடம் ஜனவரி மாதம் கனடா நாட்டில் உள்ள டொராண்டோ மருத்துவமனையில் நீரிழிவு நோயால் இறக்கும் தருவாயில் இருந்த லியோனார்ட் தாம்சன் என்ற பதினான்கு வயது சிறுவனே இன்சுலின் ஊசியை பெற்ற உலகின் முதல் நபர். 27 வயதில் நிமோனியாவால் இறந்த தாம்சன் இன்சுலின் ஊசி எடுத்துக்கொண்டு 13 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் இன்சுலின் செலுத்தப்பட்ட செயலிழந்த மயக்க நிலையில் (கோமா) இருந்த 35 வயதுடைய இந்தியர் பற்றிய தரவுகள் எதுவும் இல்லை.
1929ல் கொல்கத்தாவில் உள்ள கார்மைக்கேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமுதினி என்ற 12 வயது சிறுமிக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது. 11 வயதில் திருமணமான குமுதினிக்கு முதல் வகை நீரிழிவு நோய் இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெ.பி.போஸ்.
இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு 102 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உலகெங்கும் வாழும் அனைத்து வகை நீரிழிவு நோயாளிகளில் 7.9 கோடி பேருக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இன்சுலின் அத்தியாவசியம் என்றும் தற்போதைய விநியோக முறைகளின் அடிப்படையில் ஆராய்ந்தால் அவர்களில் பாதி பேருக்கு எதிர்காலத்தில் போதுமான இன்சுலின் கிடைக்காது என்றும் தி லான்செட் இதழில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.

குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளின் தற்போதைய திட்டமிட்ட தேவைக்கே இன்சுலின் போதுமானதாக இல்லை என்ற சூழலில் இந்த ஆரோக்கிய சவாலை சமாளிக்க அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
முதுமை, நகரமயமாக்கல், உணவு மற்றும் உடல் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அடுத்த 12 ஆண்டுகளில் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் இன்சுலின் கிடைப்பதை உறுதி செய்ய மலிவு விலையில் இன்சுலின் தயாரிப்பதற்கான முன் முயற்சிகளை உலக நாடுகள் தொடங்க வேண்டும் என்றும் அங்கணம் செய்யத் தவறினால் எதிர்காலம் கடினமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பன்னிரெண்டு ஆண்டுகள் முதல் வகை நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட இருபத்தாறு வயது நடனக் கலைஞர் ஜாஸ் சேத்தி செயற்கை கணையத்தை பெற்ற முதல் இந்தியராகிறார். அவர் செயற்கை கணையம் பெற முக்கிய காரணம் நூறாண்டுகளுக்கு முன் இன்சுலின் கண்டறிந்த சர் ஃபிரடெரிக் பாண்டிங். அவரின் உழைப்பை போற்றும் வகையில் அவரது பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் நாளை உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாக உலக சுகாதார மையம் 1991ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.