மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த மாலத்தீவு அமைச்சர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய பிரதமர் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமர். வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பதவி வகித்தாலும் அவர்கள் இந்திய பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது. பிரதமர் பதவிக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். நாட்டுக்கு வெளியே இருந்து இந்திய பிரதமர் விமர்சிக்கப்படுவாரானால் நாங்கள் அதனை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என தெரிவித்தார்.
இன்று நடைபெறும் இண்டியா கூட்டணியின் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இது ஓர் ஆரம்பகட்ட கூட்டம்தான். தொகுதிப் பங்கீடுகள் தொடர்பாக நாங்கள் பேச உள்ளோம். கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால் வலிமையான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துவதாக நான் நினைக்கவில்லை” என தெரிவித்தார்.
இதனிடையே, மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் கலபுருகியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமரான பிறகு நரேந்திர மோடி ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார். சர்வதேச விவகாரங்களில் நாம், நமது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். நேரத்துக்கு ஏற்றார்போல நாம் நடந்துகொள்ள வேண்டும். நாம் அண்டை நாடுகளை மாற்ற முடியாது” என தெரிவித்தார்.