கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மட்டக்களப்பு பேரூந்து சாலைக்கு விசேட கள விஜயத்தினை முன்னெடுத்திருந்தார்.
lஅதன்போது கிழக்கு பிராந்தியத்திற்குட்பட்ட பேரூந்து சாலைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் பேரூந்து சாலை முகாமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறும் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தை மையமாக கொண்ட சுற்றுலா வர்த்தகத்திற்கான போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்துவதுடன் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சொகுசு பஸ் சேவைகளை அறிமுகம் செய்வதற்கான புதிய வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து நவகிரிநகர் முப்பத்தெட்டாம் கொலனி வரையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக புதிய பேருந்து சேவையினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் இணைந்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆரம்பித்து வைத்திருந்தனர்.
இதன்போது ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சார்பாக பிரதிப் பொது முகாமையாளர் (இயக்கம்) பண்டுக ஸ்வர்ணஹன்ச, கிழக்கு பிராந்திய பிரதம முகாமையாளர், விஜித தர்மசேன, மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் கந்தசாமி ஸ்ரீதரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.